கீழே உள்ளவையை அழுத்தி பார்வையிடவும்
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
புண்ணியமணியகாரர் பற்றி பல வரலாறுகள் கூறுகின்றன. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வரலாற்றை எழுத்துருவாக்கித் தந்த முதலாவது நூல் “வல்வை முத்துமாரியம்மன் வரலாறு” என்னும் நுலாகும். மேற்படிநூலினைத் தொடர்ந்து
1. வல்வைச்சிவன் கோவில் குடமுழுக்கு விழா மலர் பக்கம் 17 வெளியிடப்பட்ட ஆண்டு 1967 பண்டிதர் சங்கரவைத்திலிங்கம் எழுதிய கட்டுரை
அ. வல்வை முத்துமாரியம்மன் கோவிலிற்கு தர்மகர்தாவாயிருந்த புண்ணியமணியகாரனுக்கு அடுத்தபடியாக அக்கோவில் தர்மகர்த்தாவாயினார்(வெங்கடாசலம்பிள்ளை)
2. வல்வெட்டித்துறை ஊரின்னிசை. பக்கம் 20 வெளியிடப்பட்ட ஆண்டு 1982 ஆசிரியர்கள் — பூ.க.முத்துக்குமாரசாமியும் செ.வயித்திலிங்கம்பிள்ளையும்
அ. 1796ல் எடுக்கப்பெற்ற அரசினர் இடாப்பில் இக்கோவில் காட்டப்பெற்றிருக்கிறது. அப்போது புண்ணியமணியகாரன் தான் மணியமாய் இருந்திருக்க வேண்டும்.
ஆ. 1864ல் எழுதப்பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப்பெற்ற தென்றும் சித்திரை மாதத்தில் 15நாட்கள் திருவிழாக்கள் நடந்ததெனவும் குறிக்கப் பெற்றிருக்கிறது.
3. வல்வை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் சரித்திரம் பக்கம் 03 வெளியிடப்பட்ட ஆண்டு 1983ஆசிரியர் – வ.இ.இராமசாமிப்பிள்ளை
அ. 1795ல் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது
ஆ. அம்மன்கோவிலின் முதலாவது வைரக்கற் கட்டிடம் புண்ணிய மணியகாரன் கோவில் மணியமாக இருந்த காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகின்றது.
4. வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் பக்கம் 17 வெளியிடப்பட்ட ஆண்டு 1996 ஆசிரியர் – ந.நகுலசிகாமணி
அ. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் 1795ம் ஆண்டு வேலாயுதர் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது.
5. வரலாற்றில் வல்வெட்டித்துறை. பக்கம் 47 வெளியிடப்பட்ட ஆண்டு 2006 ஆசிரியர் – பா.மீனாட்சிசுந்தரம்
அ. 1795ம் ஆண்டு வேலாயுதர் புண்ணியர் என்பவரால் இக்கோவில் இராசிந்தான் மணல் என்னும் காணியில் கட்டப்பட்டது.
ஆ. புண்ணியமணியகாரனுக்கு அடுத்தபடியாக வேலாயுதர் திருமேனியார் என்பவர் மணியமாக பொறுப்பேற்றார். இத்திருமேனியார் புண்ணியமணியகாரன் எனப்படும் புண்ணியமூர்த்தி என்பவரது சகோதரராகும்.
6. அம்மன் வரலாறு பக்கம் 9 -10 ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்டு 2008 ஆசிரியர் – சு. ஜெயகோபால்
அ. வேலாயுதர் புண்ணியமணியர் கற்பக்கிரகத்தை வைரக்கற்களால் கட்டுவித்தார்.
மேற்குறிப்பிட்ட அனைத்துப் புத்தகங்களின் தகவல்களுமே முன் கூறிய 1959ம் ஆண்டு வே.வ.சிவப்பிரகாசம் ஆசிரியர் அவர்களால் எழுதப்பெற்று 24.04.1963 இல் வெளியிடப்பெற்ற “வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் சரித்திரம்” என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு காலங்களில் வெளியிடப்பட்ட தகவல்களாகும்.
வல்வெட்டித்துறையை கருப்பொருளாகக் கொண்டு வெளிவந்த மேற்படி நூல்களில் கிடைத்த தகவல்களின் மூலம் வேலாயுதர் உடையமகனான இவர் புண்ணியர், புண்ணியமணியகாரன் அல்லது புண்ணியமூர்த்தியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளார் என்பதனை நாம் அறியக்கூடியதாக உள்ளது.
வல்வெட்டித்துறைக்கு வெளியே வசாவிளான் “கல்லடி வேலுப்பிள்ளை” அவர்கள் எழுதி 1918இல் வெளிவந்த “யாழ்ப்பாண வைபவக்கௌமுதி” என்னும் நூல் அக்காலத்திலும் அதற்கு முன்பும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெயர் சொல்லத் தகுந்த பெரியவர்களைப் பற்றிய செய்திகளைத் தருவதாகும். இப்புத்தகத்தின் 260 பக்கத்திற்கும் 261ஆம் பக்கத்திற்கும் இடையில் காணப்படும் 20பக்கங்களில் 12ம் பக்கத்தில் காணப்படும் குறிப்பானது
ஐயம்பெருமாள் வேலாயுதம்:— இவர் வல்வெட்டித்துறையிலுள்ளவர் இவருக்குப் புத்திரர்
1. வர்த்தகராயிருந்த ஞானமூர்த்தியார்
2. பகுதிப்பராபத்திர மணியமாயிருந்த புண்ணியமூர்த்தியார்.
3. ஆறுமுகத்தார் இவர் அவ்வூர் தேவாலயங்களிலுள்ள சுவாமிகள் தீர்த்தமாடுமிடங்களில்
மடாலயம் கேணி கூபமாதியவற்றை ஸ்தாபித்தவர்.
4. கமத்தொழில் வர்த்தகமாகியவற்றிற் சிறந்து விளங்கிய திருமேனியார்.
இத்தகவல்களின் மூலம் வல்வெட்டித்துறையில் “அடப்பனாக” வாழ்ந்த ஐயம்பெருமாள் வேலாயுதர் (வரலாற்றில் வல்வெட்டித்துறை பக்கம் 98) என்பவரது நான்கு புதல்வர்களில் இரண்டாமவரான திரு புண்ணியமூர்த்தியார் என்பவர் அவர் வகித்திருந்த மணியகார் (maniagar) பதவியின் மூலம் அக்காலத்தில் புண்ணியமணியகாரன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார் என்பதனை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் தந்தையார் கரையோரப்பகுதியின் உரிமம் பெற்ற அடப்பனாராக (Ablition of the System of port-hedmen or adappans of boatswins in their place. Notes on Jaffna page60) விளங்கியது போல இவரும் தந்தையைத் தொடர்ந்து “மணியகாரன்” என்னும் பதவியினை வகித்து தனது குலப்பெருமையினை தொடர்ந்து நிலைநாட்டியுள்ளார்.
போத்துக்கேய ஆட்சியாளர்களினால் யாழ்ப்பாணக் குடாநாடானது அவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயங்களின் இட அமைவிற்கு ஏற்றவாறு 32 கோவில் பற்றுக்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு மணியகாரர் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்களப் பிரதேசங்களில் இவர்கள் “திசாவை” எனும் பெயரில் அழைக்கப்பட்டனர். போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் அதற்குப் பொறுப்பான அதிகாரியும் அவரின் கீழ்ச்செயற்பட்ட மணியகாரரும் போத்துக்கேய அதிகாரிகளாகவே விளங்கினர். ஆனால் ஒல்லாந்தர்காலத்தில் பல சுதேசிகளும் மணியகாரர்களாக நியமிக்கப்பட்டனர். வர்த்தக நோக்கத்தில் வந்து இலங்கையினை கைப்பற்றியதனாலோ என்னவோ ஒல்லாந்தர்களும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்த வர்த்தகர்களையும் இது போன்ற தமது அரசநிர்வாகத்தில் இணைத்துக்கொண்டனர். “கூப்மன்(Koopman)” என அழைக்கப்பட்ட இவர்களில் “ஒப்பர் கூப்மன்” உயர்நிலை வர்த்தகர்களையும் “ஒண்டர் கூப்மன்” என்பது கீழ்நிலை வர்த்தகர்களையும் குறிக்கும். (யாழ்ப்பாண வைபவக் கௌமுதி பக்கம்118) இவ்வாறே சிறந்த வர்த்தகர்களான வேலாயுதர் “அடப்பனாராகவும்” அவர்மகன் புண்ணியமூர்த்தியார் “மணியகாரர்” ஆகவும் ஒல்லாந்தரால் நியமிக்கப்பட்டுள்ளனர் எனலாம்.
ஓல்லாந்தரின் ஆரம்பகாலங்களில் ஒல்லாந்த திசாவையின் கீழ் இயங்கிய இவர்கள் பின்னர் திசாவைக்கு சமனான மணியகாரர்களாகவும் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக நிலங்களை அடையாளப்படுத்தும் தோம்புகள் மேற்படி கோவில் பற்றினை அடையாளப்படுத்தியே அக்காலத்தில் எழுதப்பட்டன. ஒல்லாந்தரைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலத்திலும் இம்மணியகாரன் பிரிவுகளே நிர்வகிக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் அரசஅதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்கள் கலெக்டர் (District Collector)என அழைக்கப்பட்டனர். இவர்களிற்கு அடுத்தநிலையில் sub.collectorமாரும் அவர்களுக்கு அடுத்தநிலையில் மணியகாரர்களும் பதவி நிலையில் அதிகாரம் கொண்டவர்களாக அன்றைய நிலையில் விளங்கினர். இன்றைய பிரதேச செயலாளர்களிற்கு இணையானதே அன்றைய மணியகார்(maniagar) பதவி நிலையாகும்.
1829ல் கலெக்டராக விளங்கிய “யாழ்பபாணத்தின் இராசா” என பின்னாட்களில் புகழப்பெற்ற MR. Percival Acland Dyke அவர்கள் குடாநாட்டை பத்து மணியகாரன் பிரிவுகளாக பிரித்திருந்தார். இவைமுறையே (1) யாழ்ப்பாணம். (2) வலிகாமம் வடக்கு, (3)வலிகாமம்தெற்கு, (4)வலிகாமம்மேற்கு, (5)வடமராட்சி, (6)தென்மராட்சி, (7)பச்சிலைப்பள்ளி (8)கரைச்சி (9)பூநகரி (10)தீவுப்பற்று என்பவைகளாகும். எனினும் 1833ல் ஏற்பட்ட கோல்புறூக், கமரூன் சீர்திருத்தங்களின் பின் இவை பதினாறு மணியகாரன் பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டன. 1828இல் கொண்டு வரப்பட்ட புதியசட்டங்கள் மூலம் மணியகாரருக்கான தகமைகளாக ஆங்கிலத்தை வாசிக்கவும் எழுதவும் மட்டுமல்லாமல் புரியும் வகையில் பேசவும் தெரிந்திருக்க வேண்டியிருந்தது. அத்துடன் வியாபார நுணுக்கங்களை அறிந்தவராகவும் சமூகத்தில் மரியாதைக்குரிய வராகவும் திகழ வேண்டியிருந்தது. மேற்கூறிய அனைத்து தகமைகளையும் கொண்டிருந்த புண்ணியமூர்த்தியார் இவ்வாறே ஆங்கிலேயர் காலத்திலும் வடமராச்சியின் மணியகாரராக தொடர்ந்து விளங்கினார்.
மணியகாரர்களின் பிரதான கடமை பயிரிடப்படும் நிலங்களிற்கான வரிகளை உடையார்களுடன் இணைந்து அறவிடுதலாகும். இவர்களிற்கு சம்பளமாக 15 பவுணும் இவர்கள் பெற்றுக் கொடுக்கும் வரியில் 3மூ வீதமும் அரசினரால் இவர்களிற்கு வழங்கப்பட்டது. (Northern Ceylon in the 19th century. page 43,83,84,90,95 Bertram Bastiampilli) அத்துடன் இவர்கள் தமது சேவைகளின் நிமித்தம் பல அரசகாணிகளை நன்கொடையாகப் பெற்றார்கள். நிலவரிகளை மேற்கொள்வதற்காக காணிப்பதிவுகளை (தோம்புகளை) மேற்பார்வை செய்வதையும் கடமையாகக் கொண்ட இவர்கள் ஒல்லாந்தஅரசினர் காணிகளை விற்ற போது குறைந்த விலையில் அவைகளை வாங்கி தமக்குடமையாக்கிக் கொண்டனர். (இலங்கையில் தமிழர்கள். பக்கம்238) இவ்வகையில் வல்வெட்டித்துறையின் வரலாற்றில் பெரும் நிலச்சுவாந்தராக விளங்கிய இவருடைய காணிகள் வல்வெட்டித்துறையின் மேற்குப்பகுதி கடற்கரை முதல் தெற்கே வல்லை வெளிவரையும் மேற்கே பலாலிச்சந்தி வரையும் 1970ம் ஆண்டு காலப்பகுதியிலும் அடையாளம் காணப்பட்டிருந்தன.
உடுப்பிட்டி கோவில்பற்றின் மணியகாரனாக விளங்கிய வேளையிலும் தனது குலத்தொழிலான கடல்வணிகத்திலும் இவர் கொடிகட்டிப் பறந்துள்ளார். (வரலாற்றில் வல்வெட்டித்துறை பக்கம் 99) இவரின் தாயாருடன் கூடிப்பிறந்த பொன்னம்பலம் என்பவர் ஒல்லாந்தஅரசினால் முதலிப்பட்டம் பெற்றதுமன்றி இலங்கை, இந்தியா ஆதியா மிடங்களிலுள்ள பலராலும் நன்கறியப்பட்ட வர்த்தகராகவுமிருந்தனர். என 1918ஆம் ஆண்டு வெளிவந்த “யாழ்ப்பாண வைபவக்கௌமுதி” நூலின் கூற்று (பக்கம் 12) இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இவருடைய கப்பல் வர்த்தகம் ஒல்லாந்த அரசினர் காலத்தில் பிரபல்யமடைந்திருந்த மலையாளத்துடனான புகையிலை ஏற்றுமதி வர்த்தகமாகும். இவ்வர்த்தகத்தின் மூலம் மணியகாரன் என ஈழத்தில் அழைக்கப்பட்ட இவர் இந்தியாவிலிருந்து வரும் சகவர்த்தகர்கரால் “தாசில்தார்” எனவும் அழைக்கப்படலானார். இலங்கைத் தமிழரால் மணியகாரர் எனஅழைக்கப்பட்டதும் sub.collectorக்கு அடுத்த நிலையிலுள்ள இப்பதவி தாசில்தார் அல்லது வட்டாச்சியார் (இது வட்டார ஆட்சியாளர் என்பதன் திரிபாகும்) என தென்னிந்தியாவில் இன்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வாறே மணியகாரர் என்றும் தாசில்தார் என்றும் புண்ணியமூர்த்தியார் அவர்கள் அழைக்கப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது. இதனை உறுதிப்படுத்துவது போல் இவரால் கற்கட்டிடமாக அமைக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதி “தாசிந்தா மணற்றி” என இன்றும் அழைக்கப்படுவதை நாம் காணலாம். இது “தாசில்தார் மணற்றி” என்பதன் திரிபாகும். இதன் கருத்து தாசில்தாருடைய மணல் நிலம் என்பதாகும். மேற்படி கோவிலின் வடக்குப்புறமாக காணப்படும் கிணற்றுக்குப் பெயர் மணற் கிணராகும். இப்பெயர் மணற்தரையில் அமைக்கப்பட்ட கிணற்றையே சுட்டும் பெயராகும். இதேபோல இதற்கு தெற்கே அமைந்திருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதி “தாசில்தார் கலட்டி” என்பதாகும். கலட்டி என்பது கல்லடி என்பதன் மறுவடிவமாகும். இது கல் அல்லது கற்கள் நிரம்பிய இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கட்டாகும். இன்றும்கூட”கலட்டிச்சிவன்”என்பது வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரரின் வழிபாட்டுப் பெயர்களில் ஒன்றாக காணப்படுகின்றமை இங்கே அவதானிக்கத்தக்கது. இதேசமயம் வைத்தீஸ்வரர் கோவிலின் தெற்கு மேற்கு வீதிகளில் நிலத்திற்கு மேலால் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் கற்களையும் கற்றொடர்களையும் இன்றும் எம்மால் காணமுடியும். இதன்மூலம் தாசிந்தா(தாசில்தார்) எனத்தொடரும் பெயர்பெற்ற நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி இரண்டு கோவில்களுமே தாசில்தாராக (மணியகாரராக) கடமையாற்றிய புண்ணியமூர்த்தியாருக்கு சொந்தமாயிருந்த நிலப்பகுதியில் அமைந் துள்ளதனை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
மேற்படி கூற்றினை உறுதிப்படுத்துவது போல வல்வெட்டிதுறையின் பல முதியவர்களின் வாயில் வலம் வரும் “தாசிந்தா மணலிருக்கும் தாயவளே முத்துமாரி” என்னும் சொற்றொடரை குறிப்பிடலாம். இதேபோன்று வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகசபையின் தலைவராக 50வருடங்கள் கடமையாற்றிய “பெரியவர்” வ.இ.இராமசாமிப்பிள்ளையின் 10வது வருட நினைவு மலரில் காணப்படும் ஊஞ்சல் பாடலில் வரும் அடிகளான
“தவமுறுசேர் “தாசிந்தா” மணலில் மேவும்
தையல்முத்து மாரியம்மை ஆடிர் ஊஞ்சல்”
என்னும் அடிகளும் இந்த ஊஞ்சல் பாட்டின் விருத்தமாக அமைந்திருக்கும்
“தாசிந்தா மணல்” அமர்ந்த சக்தி எனும் மாரியரே
சோதியாய்அகிலமெல்லாம் சுடர்ஒளியாய் நின்றவளே
மாரியுனை யான்பாட வந்து வரும் தந்திடம்மா
என்னும் அடிகளுடன் திரு.மீனாட்சிசந்தரம் எழுதி வெளியிட்ட “வரலாற்றில் வல்வெட்டித்துறை” என்ற நூலின் 62ம் பக்கத்தில் காணப்படும் சரவணமுத்து சுந்தரமூர்த்தி அவர்களால் பாடப்பெற்ற ஊஞ்சல் பாடலில் காணப்படும்
திங்கள் அணியும் கங்கை திருச்சடையோன் பாதம்
தங்கிடும் எங்கள் வல்வை “தாசிந்தா மணலாள்கும்
மங்களம் மங்களம் நித்திய சுபமங்களம்
என்னும் அடிகளிலும் குறிப்பிடப்படும் “தாசிந்தா” என்பது “தாசில்தார்” என்பதன் திரிபு என அடையாளம் காட்டலாம். எனினும் இத் “தாசிந்தா” என்னும் சொல்லே வேறு சில ஆவணங்களிலும் பாடல்களிலும் “இராசிந்தா” என வேறுபட்டு காணப்படுகின்றது. அத்துடன் இவ்விரண்டு சொற்களும் எக்கருத்தையோ அல்லது பொருளையோ தராமல் வெறும் ஓசையை மட்டுமே கொண்டு இயங்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. இதன்முலம் “தாசில்தார்” என்னும் சொல்லினை மூலமாகக்கொண்டு பொருளற்று பிறந்தவையே அச்சொற்கள் என உறுதிப்படுவதுடன் மூலச் சொல்லான “தாசில்தார்” என்பது “வேலாயுதம் புண்ணியமூர்த்தியாரையே” குறித்து நிற்பதை நாம் அறியலாம்.
முன்கூறியது போன்று தான்வகித்த தாசில்தார் (மணியகாரன்) பதவியின் மூலம் ஒல்லாந்த அரசினரிடமிருந்து பெறப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் அடங்கிய மணல் நிலத்தில் இவரால் கற்றழியாக (கல்லாலான கோவில்) புனரமைக்கப்பட்டதே இன்றைய முத்துமாரியம்மன் கோவிலாகும். கடலோடிகளின் குறிப்பாக கடல்வணிகர்களின் தெய்வமாக கருதப்படும் முத்துமாரியம்மனே வல்வெட்டித்துறை மக்களின் குலதெய்வமாக வழிபடப்படுகின்றது. ஆயிரம் வருடங்களிற்கு முன்பு இராஜராஜசோழன் காலத்தில் கோடிக்கரையில் இருந்துவந்த முத்துமாரியம்மனே வல்வையில் கோவில் கொண்டருள்வதாக தலவரலாறு கூறுகின்றது. ஆனால் இக்கோவிலில் நடக்கும் சிலசடங்குகளான
1. குளிர்த்தித் திருவிழா (சித்திரா பௌர்ணமியை தொடர்து வரும்நாளில் நடைபெறுவது)
2. வழுந்திப் பொங்கல் (வைகாசிப் பௌர்ணமிளன்று நடைபெறுவது)
என்பனவும் கோவிலின் கர்பக்கிரகத்தை சுற்றி அன்னையின் குளிர்மை நாடி எப்பொழுதும் நிரப்பப்பட்டிருக்கும் நீர்த்தொட்டியும் கண்ணகி வழிபாட்டின் உறுதியான எச்சங்களாக காணப்படுகின்றன. கண்ணகி வழிபாடே முத்துமாரியம்மன் வழிபாடாக மாற்றமடைந்ததெனக் கூறும் “மாரியம்மன் மான்மிய வரலாறு” போல் வல்வெட்டித்துறையிலும் ஆரம்பத்தில் நிலவிய கண்ணகி வழிபாடே ஈற்றில் மாரியம்மன் வழிபாடாக மாற்றமடைந்துள்ளதை மேற்படி சடங்குகள் உறுதிப்படுத்துகின்றன. (கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் மேற்கூறிய எவ்வித திருவிழாக்களும் நடைபெறுவதில்லை)
கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியதாக கூறப்படும் கண்ணகி பல கப்பல் (நாவாய்)களின் அதிபதியானவனும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமகனுமான மாநாயக்கனின் மகளாவார். காவிரிப்பூம்பட்டினத்துடன் கடல்வணிகத்தில் இணைந்திருந்த வல்வெட்டித்துறையிலும் அக்காலம் முதலே கண்ணகி வழிபாடு ஆரம்பமாகி இருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாகவே அவ்வழிபாடு முத்துமாரியம்மன் வழிபாடாக உருமாறி வளர்ச்சியடைந்துள்ளது எனலாம்.
இருபதாம் நூற்றாண்டு வரையிலும் பல மாநாயக்கர்கள் வல்வெட்டித்துறையில் வாழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும். (வல்வெட்டித்துறை ஊரின்னிசை பக் 46 – 52) இவ்வகையில் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாநாயக்கனான புண்ணியமூர்த்தியாரும் மேற் கூறிய நூல்களில் கூறப்பட்டதன் பிரகாரம் எமது குலதெய்வமான முத்துமாரி யம்மனிற்கு கற்றழி (கற்களால்கட்டப்பட்டகோவில்) அமைத்துள்ளார். இதன்மூலம் வல்வெட்டித் துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளார். மேற்படி கற்றழியில் புனர்நிர்மானம் அல்லது திருப்பணி என்ற பெயரில் முன்கூறிய நூல்கள் வெளிவருவதற்கு முன்பு 1957ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட பழைய கோபுரமும் ஒன்றாகும். பல்லவர் கலைப்பாணியில் புண்ணிய மூர்த்தியாரால் அமைக்கப்பட்ட அக்கோபுரம் இவரின் பெருமைக்கும் வல்வெட்டித்துறையின் சிறப்பிற்கும் சான்றாதாரமாக நின்று நிலவியது. இக்கோவில் அமைக்கப்பட்ட காலத்தில் இவரால் அமைக்கப்பட்டதே மணியகாரன் திண்ணைப் பள்ளிக் கூடமாகும்.
(சரித்திரச்சான்றுகளாக நின்று ஓர் இனத்தின் அல்லது ஓர் பிரதேசத்தின் தொன்மையை கூறுவதில் கல்வெட்டாதாரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இவைகள் நினைவுக்கல் வெட்டுக்களாகவும் எழுத்துப் பொறிப்புகளாகவும் கட்டிடங்களான கோவில், அரன்மனை, மாளிகைகள் என பல இடங்களிலும் காணப்படும். பின்னாட்களில் புனர்நிர்மானம் என்ற பெயரில் அவைகள் இடித்தழிக்கப்பட்டோ அல்லது மாற்றங்களிற்கு உள்ளாக்கப்படும் போது நிச்சயமாக அவை பதிவிற்குள்ளாக்கப்பட வேண்டும். மேற்படி பதிவுகள் மூலமே தொல்லியல் சான்றுகளும் தகவல்களும் அடுத்த சந்ததியினரிடம் கைமாற்றப்படுகின்றன. பக்தி மேலீட்டினாலும் வரலாற்றுஅறிவின்மையாலும் எமது மண்ணில் இந்த நடைமுறை இன்றுவரை கைக்கொள்ளப்படாமை மனவருத்தத்திற்குரியது.)
வல்வெட்டித்துறையின் கல்வி வரலாற்றில் இவர் தொடக்கி வைத்த இந்த திண்ணைப் பள்ளிக்கூடமே முதலாவது கல்விக்கூடமாக அடையாளம் காணப்படுகின்றது. 1816ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரியால் தெல்லிப்பளையில் நிறுவப்பட்ட பாடசாலையே யாழ்ப்பாண வரலாற்றில் முதலாவது நவீன பாடசாலையாகும். கல்வியுடன் தமது கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக ஆங்கிலேயர்களினால் இளவயது பாலகர்களிற்கான ஆரம்பப்பாடசாலைகள் முதலில் இவ்வாறே ஆரம்பிக்கப்பட்டன. எனினும் இவ்வாறான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்
1.குருகுலக்கல்வி முறை
2.திண்ணைப்பள்ளி முறை
என இருமுறைகளில் கல்வியறிவினை ஊட்டுவதற்கு நம் முன்னோர்கள் முயன்று வந்தனர். ஏனெனில் முற்காலங்களில் குறிப்பாக ஆங்கிலேயர் காலத்திற்கு முன் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என படிமுறை ரீதியில் பாடவிதானங்களோ அல்லது பாடசாலைகளே அமைந்திருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென்றே கூறலாம்.
ஆரம்பகாலங்களில் பொது இடங்களில் எதிர்கால சந்ததியினரின் அறிவினை வளர்க்கு முகமாக குறிக்கப்பட்ட குருவினை (ஆசிரியரை)க் கொண்டு அரசர்களினாலும் செல்வந்தர்களினாலும் சமுகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களினாலும் மாணாக்கருக்கு கல்வியறிவு ஊட்டப்பட்டது. இவ்வாறான முறைமையினை “மோசிகீரனா” என்னும் சங்கப்புலவர்
“அன்னாயிவனே ரிளமாணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன்கொல்லோ”
தன்னூர்மன்றம் ஸ்ரீ பொதுஇடம்
எனப்பாடியுள்ளமையை சங்கத்தமிழ்நூலான குறுந்தொகைப்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட கல்வியூட்டும் முறையானது ஆசிரியரின் உறைவிடமான வீட்டிற்குச்சென்று பயிலும் முறைமையினை பின்னர் உருவாக்கியது. இதுவே குருகுல முறையென அழைக்கப்படலாயிற்று. எனினும் காலமாற்றத்தில் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று பயிலும் முறைமாறி ஆசிரியரும் மாணாக்கர்களும் பொது இடமொன்றில் கூடிப்பயில்வதும் பயிற்றுவிப்பதுமான நிலை தோன்றியது. பௌத்த மற்றும் சமணமதங்களினால் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட இம்முறையானது அவர்களின் வழிபாட்டு இடங்களிலே மேற் கூறியவாறு நடைபெற்று வந்தமையால் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் போலவே அவர்களுடைய கல்வித்தலங்களும் பள்ளியெனவே அழைக்கப்படலாயிற்று. மேற்படி பள்ளிகளில் மாணவர்கள் நிலத்தில் அமர்ந்திருக்க அவர்களின் முன் காணப்பட்ட வெட்டப்பட்ட மரக்குற்றிகளிலும் அல்லது கற்களிலும் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் கற்பித்தார்கள். காலம் செல்ல செல்ல மரக்குற்றிகளிற்குப் பதிலாக ஆசிரியர்களிற்காக திண்ணைகள் உருவாக்கப்பட்டன. (கதிரை, மேசை என்பவற்றின் வரவிற்கு முன் வெட்டப்பட்ட மரக்குற்றிகளும் கட்டப்பட்ட அல்லது மெழுகப்பட்ட திண்ணைகளுமே ஆசிரியர்களின் ஆசனங்களாக விளங்கின) இவ்வாறான திண்ணைகள் கொண்ட பள்ளிகளே திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என அழைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1816ஆம் ஆண்டு முதல் அமெரிக்க மிசனரியினரும் வெஸ்லியன் மிசனரியினரும் போட்டி போட்டுக் கொண்டு யாழ் குடாநாட்டின் பலபாகங்களிலும் பலதரப்பட்ட பாடசாலைகளை அமைத்து கல்வியுடன் தமது சமயத்தையும் பரப்ப முயன்றனர். இக்காலத்திலேயே ஆறுமுகநாவலரும் 1934இல் வெஸ்லியன் மிசனரிப் பாடசாலையில் இணைந்து கொண்டார். அங்கு கல்வி கற்கும் காலத்தில் அவருடைய கிறிஸ்தவப்பெயர் “பைராட்” என்பதாகும். (ஈழம் தந்த நாவலர். பக்கம்41. பொன்.பூலோகசிங்கம்) அக்கல்லூரியின் அதிபரான பேர்சிவல் என்ற கிறிஸ்தவ பாதிரியாருடன் இணைந்து வேதாகமத்தை(பைபிள்) ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர் இவரே. இதன்மூலம் தமிழ் மக்களை மெதடிஸ்த திருச்சபையினரின்பால் திருப்புவதில் மற்றெல்லோரையும் விட இவரே அக்காலத்தில் பெரும் பங்பாற்றினார். இக்காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மேல் பெரும் அவதூறான பிரச்சாரங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார். இவ்வாறு பதினாலு வருடங்கள் மிசனரியில் இவர் ஊழியம் புரிந்தார். (இலங்கையில் தமிழர் பக் 358) இறுதியில் மிசனரியினருடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1848 ஆவணியில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தார்.
முதலாவது சைவத்தமிழ் வித்தியாசாலையாக வரலாற்றில் பதியப்பட்டிருககும் இப்பாடசாலை தோன்றுவதற்கு முன்பே யாழ்ப்பாணத்தின் சிலபகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அங்காங்கே நிலவிவந்தன. (ஈழம்தந்த நாவலர் பக்கம்139) (யாழ்ப்பாண வைபவகௌமுதி பக்கம்276)
1. வல்வெட்டித்துறை குமாரசாமி முதலியாரின் திண்ணைப்பள்ளிக்கூடம்
2. உடுப்பிட்டி அருளம்பலமுதலியாரின் தருமப்பள்ளிக்கூடம்
3. இருபாலை சேனாதிராசமுதலியாரின் பள்ளிக்கூடம்
இங்கு முதலாவதாக கூறப்பட்டிருக்கும் வல்வெட்டித்துறை குமாரசாமி முதலியாரின் திண்ணைப்பள்ளிக்கூடம் என்பது புண்ணியமணியகாரரின் ஒரேவாரிசான சிவகாமியை மணம் புரிந்து இவரின் “மருமகனான” குமாரசாமி முதலியாரால் அமெரிக்க மிசனரியிடம் கையளிக்கப்பட்டது. இதனால் மிசனரியினரின் குறிப்புகளில் “குமாரசாமி முதலியார் திண்ணைப்பள்ளிக்கூடம்” என பெயர் குறிக்கப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலும் குறிப்பிட்ட திண்ணைப் பள்ளிக்கூடமும் அதனுடன் இணைந்திருந்த கிட்டங்கியும் வேம்படியில் வீதியின் தென்மேற்காக காணப்பட்ட மணியகாரன் கடைத்தொகுதியும் அவைகளின் ஸ்தாபகரான “மணியகாரன்” பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையின் மிக நீண்ட வரலாற்றில் எழுத்து மூலமான ஆதாரங்களுடனும் எமது குலதெய்வமான முத்துமாரியம்மன் கோவில், திண்ணைப்பள்ளிக்கூடம், கிட்டங்கி, கடைத்தொகுதி எனும் வரலாற்று சான்றுகளுடனும் பின்னிப்பிணைந்து காணப்படும் உயரிய மனிதர் திரு. வேலாயுதம் புண்ணியமூர்த்தியார் ஆவார். இருநூறு வருடங்கள் கடந்தும் எமது சமூகத்திற்கு அவராற்றிய சேவைகள் இலகுவாக அடையாளம் காணக்கூடியவாறு உள்ளமை எமது மண்ணில் அவர் கொண்ட பாசத்திற்கும் பரிவிற்கும் எடுத்துக்காட்டுகளாக என்றும் திகழ்பவையாகும்.
வல்வெட்டித்துறையின் “மண்ணின் மைந்தர்கள்” வரிசையில் 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்டமன்னனாகிய 7ம்செகராசசேகரன் எனும் 1ம் சங்கிலி 17ம் நூற்றாண்டில் 1619 —- 1621 வரை அடையாளம் காணப்பட்ட கரை(யோ)யாரத்தளபதியான “வருணகுலத்தான்” என்பவர்களிற்குப் பின் 18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டிலும் குறிக்கப்பட்ட பிரதேசத்தின் ஆணையிடும் அதிகாரியாக முன்னின்ற புண்ணியமணியகாரன் எமது மண்ணின் மைந்தர்களில் பெயர் குறிக்கத்தக்கவர்………
புண்ணியமணியகாரரின் வம்சத்தினர்
1886 வெளிவந்த பாவலர் சரித்திர THE GALAXY OF TAMIL POETS என்ற நூலே தமிழ் மொழியில் வந்த முதலாவது தமிழ்ப்புலவர்களின் சரித்திரம் கூறும் நூலாகும். இந்நூல் வெளிவந்த காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த 410 தமிழ் புலவர்கள் மற்றும் அறிஞர்கள் பற்றிய விபரங்களையும் கொண்ட இந்நூலில் எமது ஊரைச்சேர்ந்தவர்கள் எனக்குறிப்பிடப்பட்டவர்கள் இருவராவார்கள் அவர்கள் முறையே
1. வல்லிபட்டித்துறை – க.ஏகாம்பரம்
2. வல்லிபட்டித்துறை – ந.ஏகாம்பரம்(அட்டாவதானி)
(27 october 1877 Death of N.Ekamparam A scholer and poet. He was the only Jaffna man who was recognized as an addavathany. (one who can remember many things simultaneousiy) என notes on Jaffna நூலின் 39 பக்கத்தில் இவரின் மறைவு குநிப்பிடப்படுகின்றது.)
எனக்கூறும் பாவலர் சரித்திரதீபக ஆசிரியர் இவர்களில் முதலாவதாக குறிப்பிடும் க.ஏகம்பரத்தை “சாதி” ஆசாரத்தால் இவர் அப்பகுதியில் இருக்கும் கடலோடிகள் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறும் அதே வேளை அட்டாவதானியான இரண்டாவது ந. ஏகாம்பரத்தை முதாலாவதாகக் கூறும் க.ஏகாம்பரத்தின் மருமகன் எனக் கூறுகிறார் இக்குறிப்புகள் தவிர இன்றைய நிலையில் இவர்களின் சந்ததியினரை அடையாளம் காணக்கூடியதான எந்தக் குறிப்புகளும் அந்த நூலில் காணப்படவில்லை.
இப்பாவலர் சரித்திரதீபகத்தினை கொழும்பு தமிழ்ச்சங்கத்தினர் இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு 1979 இல் கலாநிதி பொ. பூலோகசிங்கம் எனும் தமிழ் இலக்கிய புலமை மிக்க பேராசிரியர் எழுதிய சிறந்த குறிப்புரைகள் அடங்கியதாக மறுபதிப்புச் செய்திருந்தார்கள். இப்புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் 129ஆம் பக்கத்தில் காணப்படும் குமாரசுவாமிமுதலியார் பற்றிய குறிப்புக்களில் “இவர் மனைவி சிவகாமி (1800 – 1901) புண்ணியமணியகாரரின் மகளாவார் என்னும் குறிப்புகாணப்படுகிறது. இதனைவிட மேற்கூறப்பட்ட குமாரசாமி முதலியாரின் பெயரில் உடுப்பிட்டி ஆறுமுகம்பிள்ளை என்பவர் வல்வை பாரதி நிலைய முத்திராட்சாலையில் 1887 இல் பதிப்பித்த குமாரசுவாமி முதலியார் கவித்திரட்டு என்னும் நூலை வெளியிட்டார். எனவும் அந்நூலில் ஐம்பத்தெட்டு தனிப்பாடல்கள் இடம்பெறுவதாகவும் இத்திரட்டில் வல்வை தீருவில் சுப்பிரமணியர் பதிகம், வல்வை பெரியம்மன் மற்றும் கற்பகப்பிள்ளையார் பதிகமும் ஊஞ்சலும், பொலிகண்டி கந்தவனநாதர் ஊஞ்சல் என்பனவற்றுடன் மேலும் பல பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்னும் குறிப்பு காணப்படுகின்றது. அத்துடன் 130ம் பக்கத்தில் காணப்படும் வேறெரு குறிப்பில் வல்வெட்டி(த்துறை) ஊரிக்காடு என்னும் பகுதியிலுள்ள தமது நிலத்தினை குமாரசுவாமி முதலியார் அமெரிக்கமிசனரிக்கு வழங்கியுள்ளார் என்னும் குறிப்பு ஒன்றும் காணப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது.
மேற்கூறியவாறு நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் “பாவலர் சரித்திரதீபகம்” நூல்கூறும் “குமாரசுவாமிமுதலியார்” இவருக்கும் வல்வெட்டித்துறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு அல்லது உறவு உள்ளதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்துவது போலவே வயாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை எழுதிய “யாழ்ப்பாண வைபவக்கௌமுதி”யின் 235 ஆம் பக்கத்தில் காணப்படும் தகவலென்று பின்வருமாறு
வல்வையம்பதி ஸ்ரீ. க. குமாரசுவாமிமுதலியாரால் பாடப்பட்டது
கொச்சைக்குறத்தி தன் கோமானைக்கும்பிட மாவைப்பதிக்கு
கச்சைக்குகுதிரையின் மேலே குலேந்துங்க வள்ளல் செல்வான்!…………….
எனும் பாடலொன்றும் காணப்படுகின்றது. இதேபோலவே 1989 இல் பல்கலைப்புலவர் என தமிழ் அறிஞர்களினால் அழைக்கப்பட்ட க.சி.குலரெத்தினம் என்பவரால் “செந்தமிழ் வளர்த்தசெம்மல்கள்” என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நூலில் காணப்படும் 19 தமிழ் அறிஞர்களில் மேற்கூறிய வல்வெட்டி குமாரசாமி முதலியார் மற்றும் அவருடைய மகனான “வைமன்” கதிரவேற்பிள்ளை என்பவர்களைப் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன. இவைகளில் அப்புத்தகத்தின் 120 வது பக்கத்தில் காணப்படும் குமாரசுவாமி முதலியார் பற்றிய குறிப்பு ஒன்றில்
“இத்தகமைகள் பல இயல்பாகவும் இயற்கையாகவும் மன்னிவளர அவர் (குமாரசுவாமிமுதலியார்) புகழும் வளர அவருக்கு புண்ணியமணியகாரன் என்பவரின் புதல்வியார் சிவகாமி என்பார் நல்லறம் செய்வதற்கு வாய்த்த இல்லக்கிழத்தியானார்”
மேற்கூறிய தகவலின் மூலம் வல்வெட்டி குமாரசுவாமி முதலியார் என்பவர் புண்ணியமணியகாரர் என அழைக்கப்பட்டவரின் மகளான சிவகாமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள முடிகின்றது
இதோ போலவே “செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்” என்ற புத்தகத்தின் 172 ஆம் பக்கத்தில் காணப்படும் “வைமன் கதிரவேற்பிள்ளை” பற்றிய குறிப்பு ஒன்றில்
“குமாரசுவாமி முதலியார் புண்ணியமணியகாரர் எனக் காரணப்பெயர் பெற்று விளங்கிய பெரியவரின் மகள் சிவகாமி என்பவரை மணந்து சபாபதி என்னும் மைந்தனைப் பெற்ற பின்னர் 1829 ஆம் ஆண்டிற் பிறந்த இரண்டாம் மைந்தனுக்குப் கதிரவேற்பிள்ளை எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்”
எனக் காணப்படுகின்றது இதன் மூலம் வல்வெட்டியைச் சேர்ந்த குமாரசுவாமி முதலியார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புண்ணியமணியகாரரின் மகளான சிவகாமி என்பவரை மணந்து சபாபதி மற்றும் கதிரவேற்பிள்ளை என்னும் இரு குழந்தைகளைப் பெற்றார் என நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
இவைகளின் தொடர்ச்சியாக முன்கூறிய க.சி.குலரெத்தினம் எழுதிய “இந்துபோர்ட் இராசரெத்தினம் காலமும் வாழ்வும்” என்ற நூலில் 19ம் பக்கத்தில் பின்வருமாறு காணப்படுகின்றது….
கதிரவேற்பிள்ளை அவர்கள் முதலில் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசர் என்பாரின் புதல்வியை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் இல்லறம் நடத்தியபின் அப்பெண் இறந்ததும் மறுமணமாக கோப்பாய் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரியும் கதிரேசர் புதல்வியுமான சிவகாமிப்பிள்ளை என்பாரை மணந்து பெற்ற மைந்தனே கௌரவ பாலசிங்கம் அவர்களாவர். கதிரவேற்பிள்ளை அவர்களின் சகோதரி மீனாட்சிப்பிள்ளை என்பாரை மாற்றுச் சம்பந்தமுறையில் கோப்பாய் சுப்பிரமணியம் அவர்கள் மணந்து கொண்டார்.(இவர்களின் மைந்தனே இந்துபோர்ட் இராசரெத்தினம்)
மேற்கூறியபடி நாம் அனுமானித்ததன் முடிவினை உறுதிப்படுத்துவது போல் 1992 இல் இலங்கையில் இந்துகலாச்சார அமைச்சினால் வெளியிடப் பொற்ற “SOME EMINENT TAMILS” என்னும் நூலின் 35 ஆம் பக்கத்தில்
“KATHIRAVETPILLAI’S FATHER WAS CUMARASWAMY MUDALIYAR HIS MOTHER WAS SIVAGAMIPILLAI KATHIRAVETPILLAI WAS BORN IN 1829 IN VALVETTITHURAI”
இதுவரை நாம் கண்ட தகவல்கள் அல்லது தரவுகளின் மூலம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவிலை 1796 இற்குமுன்பு கருங்கல் கட்டிடமாக கட்டிய புண்ணியமூர்த்தி எனப்படும் புண்ணியமணியகாரருக்கு சிவகாமி என்னும் மகள் இருந்துள்ளதையும் அவர் வல்வெட்டியைச் சேர்ந்த குமாரசுவாமிமுதலியார் என்பவரை மணந்து சபாபதி(முதலியார்) மற்றும் கதிரவேற்பிள்ளை(வைமன்) என்னும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் மீனாட்சிப்பிள்ளை என்னும் பெண்ணொருவரையும் பெற்றெடுத்துள்ளர் என்பதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி எம்மால் உறுதிப்படுத்த முடிகின்றது. இதனைவிட பாவலர் சரித்திர தீபகத்தின் 129ஆம் பக்கத்தில் தரும் குறிப்பின் மூலம் புண்ணியமணியகாரரின் மகளான சிவகாமி 1800 ஆண்டில் பிறந்து 1901 ஆம் ஆண்டில் மறைந்துள்ளார் என்பதனை நாம் அறியக்கூடியதாக உள்ளது. இவர்களே புண்ணியமணியகாரரின் வம்சத்தினர் ஆவார்கள்.
மேற்குறிப்பிட்ட குமாரசுவாமி முதலியாரின் காலம் 1791 முதல் 1874 வரையுள்ளதாகும். இதன் மூலம் 1846 ம் வருடம் பெப்ரவரி மாதம் 1ம் திகதி எழுதப் பெற்ற முத்துமாரியம்மன் மகமை உறுதியில் மேற்கூறிய புண்ணியமணியகாரரின் புதல்வியான சிவகாமியின் பெயரோ அல்லது அவருடைய கணவரான குமாரசுவாமி முதலியாருக்கோ கோயில் உரித்தானது அல்லது அவர்களினால் நிர்வகிக்க அல்லது பராமரிக்கப்படுகின்றது என்றும் எந்த விதமான குறிப்புகளும் காணப்படவில்லை. மறுவளமாக கடல் வணிகர்களான வல்வெட்டித்துறை மக்கள் காலம் காலமாக தாம் செய்யும் தெய்வப்பணிகளுக்காக தமக்குத்தாமே விதித்துக் கொள்ளும் மகமை மூலம் தொடர்ந்து இக்கோவிலை நிர்வகித்து வந்துள்ளமையை நாம் அறியக்கூடியதாக உள்ளது. மேற்கூறப்பட்ட மகமை உறுதியில் புண்ணியமூர்த்தியாரின் சகேதாரர்களின் புத்திரர்களான திரு “ஆறுமுகத்தார் விஸ்வநாதர்” மற்றும் “திருமேனியார் குழந்தைவேலு” என்பவர்களது பெயர்களுடன் மேலும் நானூறு பெயர்கள் காணப்படுவதாக “வரலாற்றில் வல்வெட்டித்துறை” நூலின் ஆசிரியர் திரு பா.மீனாட்சிசுந்தரம் தனது நூலின் 47ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். இதன்முலம் 1846ம் ஆண்டிற்கு முன்பே வேலாயுதம் புண்ணியமூர்த்தியார் என்னும் புண்ணியமணியகாரர் மற்றும் வேலாயுதம் திருமேனியார் என்போர்கள் மறைந்து விட்டார்கள்?….. என்பதுடன் கோவிலும் பொதுக் கோவிலாகவே தொடர்ந்து விளங்கி வந்துள்ளது என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்
இதனைவிட வ.இ இராமசாமிப்பிள்ளை அவர்கள் வெளியிட்ட “வல்வை முத்துமாரியம்மன் கோவில்சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 3ம் பக்கத்தில் காணப்படும் “அம்மன் கோவிலின் முதலாவது வைரக்கல் கட்டிடம் புண்ணியமணியகாரன் என்பவர் கோவில் மணியமாக இருந்த காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகின்றது. என்னும் குறிப்பின் மூலம் புண்ணியமணியகாரருக்கு முன்பும் கோவில் இருந்துள்ளதுடன் அவருக்கு முன்பும் வேறு சிலரோ அல்லது பலரோ அக்கோவிலுக்கு மணியமாக கடமையாற்றியுள்ளார்கள் என்பதனையும் அறியக்கூடியதாக உள்ளது. இதனாலேயே திரு.புண்ணியமூர்த்தியார் எனப்பட்ட புண்ணியமணியகாரரின் மகளான சிவகாமியோ அவரது கணவரான குமாரசுவாமி முதலியார் அவர்களோ அல்லது அவர்களின் பின்வந்த சந்ததியினரோ கோவிலின் நிர்வாகத்திலே அல்லது பாராமரிப்பிலே பங்கம் ஏற்படுத்தாமல் ஆரம்பம் முதலே ஒதுங்கிக் கொண்டனர் போலும்.
இதுவரை வரைநாம் ஆய்வு செய்த திரு வேலாயுதம் புண்ணியமூர்த்தி என்னும் புண்ணியகாரன் அன்று வல்வெட்டித்துறையில் வாழ்ந்த இடம் கிழக்கே இன்றைய வேம்படி முதல் மேற்காக அ.மி.கல்லூரி அமைந்துள்ள இடம் வரையாகும். புண்ணியமூர்த்தியாரின் மகளான சிவகாமிப்பிள்ளைக்கு உரித்தான அப்பகுதிகாலம் கரைய இன்று சிறுசிறு நிலத்துண்டுகளாகி வெவ்வேறு மனிதர்களுக்கு உரியதாகிவிட்டது. எனினும் இற்றைக்கு 70-80 வருடங்களுக்கு முன்புவரை மேற்கூறிய பகுதியில் வீதிக்கு தெற்காக இருக்கும் கடைத் தொகுதி மணியகாரன் கடைத் தொகுதி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. (நான் சந்தித்த பல முதியோர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்) இதோ போன்று அப்பகுதியிலுள்ள வீடொன்று “புன்னையடி” வீடென்று சிலகாலம் முன்புவரை அழைக்கப்பட்டு வந்துள்ளமை கண்கூடு. “புண்ணியர் வீட்டடி” என்பதே திரிபடைந்து பொருள்மறைந்து “புன்னையடி” வீடென அழைக்கப்பட்டுள்ளது என நம்பலாம். ”புன்னையடிஆச்சி” என அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படும் பெண் கூட குமாரசாமி முதலியார் 1874 இல் மறைந்த பின்னும் 27 ஆண்டுகள் வாழ்ந்திருந்து மறைந்த சிவகாமியினையே நினைவூட்டுவதாகும்.
இவைகளைவிட முக்கியமானது மேற்கூறிய பகுதியில் இன்றும் அமெரிக்கமிசன் ஆரம்பக்கல்லூரிக்கு மேற்குப்புறமாக வீதியின் தெற்குப்புறமாக காணப்படும் அந்தக் கிட்டங்கிக்கு “மணியகாரன் கிட்டங்கி” எனவே ஆரம்பத்தில் பெயர் வழங்கி வந்துள்ளது. எனினும் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு அக்கிட்டங்கியில் சிறிய கடை வைத்திருந்த பெண்மணியின் பெயரால் “குஞ்சரம் கிட்டங்கி” என்னும் பெயரைப் பெற்றிருந்தது இன்று? காலமாற்றம் பெயர்களை மாற்றும்? இதோ போன்று இதனுடன் இணைந்நிருந்த “மணியகாரன் திண்ணைப்பள்ளிக்கூடம்” என அழைக்கப்பட்ட “திண்ணைப்பள்ளிக்கூடம் பின்பு அ.மி.கல்லூரி என்றும் அரியகுட்டிப் பள்ளிக்கூடம் எனவும் பிற்காலத்தில் வழங்கியதும் நாம் அறிந்ததே!………..
நன்றி- ஆய்வும் ஆக்கமும் – தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்