கேளிக்கை கொண்டாட்டங்கள் மூலம் தமிழரின் விடுதலை உணர்வை அழிக்க எதிரி திட்டம்:- நக்கீரன்

கேளிக்கை, விளையாட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மூலம் எதிரிகள் தேசிய நெருப்பை அணைக்கப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களது எண்ணம், சிந்தனை, செயல் ஆகியவற்றை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து திசை திருப்புவதற்கு சிறீலங்கா அரசு பெரும்பாடு படுகிறது.

தமிழ்மக்களை விடுதலை உணர்வில் இருந்து வெட்டிவிட மெத்தப்பாடுபடுகிறது. கேளிக்கை, விளையாட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மூலம் எதிரிகள் தேசிய நெருப்பை அணைக்கப் பார்க்கிறார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற இறைதூதுவர். எகிப்தில் 400 ஆண்டுகள் பரோ மன்னர்களது அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு (பாலஸ்தீனம்) கூட்டிச் செல்ல முயன்றதாக பைபிள் கூறுகின்றது. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் இரவோடு இரவாக அந்த நாட்டைவிட்டு வெளியே கொண்டுவந்ததால் அவர்கள் உறட்டிக்கு குழைத்து வைத்த மாவை நெருப்பில் வாட்டி எடுக்க நேரமில்லாமல் போய்விட்டது. எனவே தங்களோடு எடுத்து வந்த மாவில் உறட்டி செய்து வெய்யிலில் காயை வைத்து சாப்பிட்டார்கள். அதனை நினைவு படுத்தி இன்று மட்டும் பாஸ்ஓவர் விடுமுறை நாள்களில் வேகாத உறட்டியையே சாப்பிடுகிறார்கள். எகிப்தில் இருந்து யூதர்கள் வெளியேறிய கதையை ‘வெளியேற்றம்’ (Book of Exodus from chapters 1 to 15) எழுதி வைத்துள்ளார்கள். கிமு 1440 இல் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை பெரும்பாலும் கற்பனையாக இருக்க வேண்டும். ஆனால் யூதர்கள் நம்புகிறார்கள்.

கதையோ கற்பனையோ அந்த நாளை யூதர்கள் நினைவில் நிறுத்தி இன்றும் கொண்டாடுகிறாகள். ஆனால் தமிழர்கள் எமது கண்முன்னே நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை வேகமாக மறந்து வருகிறார்கள். விடுதலை உணர்வில் இருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்கு சிறீலங்கா அரசு பெரும்பாடு படுவது போல புலம்பெயர் நாடுகளிலும் இந்த திசை திருப்பும் பணி கச்சிதமாக நடைபெறுகிறது. சிறீலங்கா அரசுக்குத் துணையாக சில கனடிய தமிழர்களும் செயல்படுகிறார்கள். இதில் புலம்பெயர் ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் போது ஊடகங்கள் வாய்திறப்பது வியப்பல்ல.

இளையராசா மண்ணையும் நேசிக்கவில்லை. எமது மக்களையும் நேசிக்கவில்லை. அவரது இசை ஞானம் எமது விடுதலைப் போராட்டத்துக்கு எள்முனையேனும் பயன்படவில்லை. அப்படிப்பட்டவரைக் கூப்பிட்டு ஒரு சிலர் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள்.

கடல் கடந்து வாழும் உங்களைப் பார்க்க கடல் கடந்து வருகிறேன் என்கிறார். ஆனால் நான் அவரைப் பார்க்கத் தயாராயில்லை. என் இனம் அழுத போது நீ கடல் கடந்து போய் பார்த்திருக்க வேண்டும். அது முடியாவிட்டால் இருந்த இடத்தில் இருந்து ஒரு இரங்கற் பாவாது பாடியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து கலைஞர்களை கூட்டிவந்தாலும் சரி இங்குள்ள கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினாலும் சரி அதன் மூலம் வரும் வருவாயில் ஒரு கணிசமான பகுதி எமது மக்களது கண்ணீரைக் துடைக்கப் பயன்படுத்த வேண்டும். அவர்களது வாட்டத்தைப் போக்க பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு வழங்க்க் கூடாது. அப்படிச் செய்வது பாவம்.

தன் உறவுகள் பசித்திருக்க தான் மட்டும் வயிறு புடைக்கச் சாப்பிட்டு மகிழ்பவன் பாவத்தையே சாப்பிடுகிறான்.

‘தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்.‘

என்று பாரதிதாசன் சமூகத்துக்கு உதவாதவர்களைச் சாடுகிறார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வருந்குகிறார் வள்ளலார்.

தாயக மக்கள் படும் துன்பத்தில் நானும் பங்கு கொள்ளுவேன் எனச் சூளுரைத்து எவனொருவன் முன்வருகிறானோ அவன்தான் உண்மையான தமிழன். அவனே மானமுள்ள தமிழன்.

ஏனையவர்கள் நாமமது தமிழர்கள் என்பேன்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! � கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! � கிளியே!
நாளில் மறப்பா ரடீ!

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! � கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

நக்கீரன்

Leave a Reply

Your email address will not be published.