விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட 2009-ம் ஆண்டு காலப்பகுதியில் அந்த இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இலங்கை அரசு எந்த அந்தஸ்தில் வைத்திருக்கிறது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு அரசிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரபூர்வமான, தெளிவான அறிவித்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.
30 ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை பேணுவதற்காக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பல வகையான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டி இருக்கிறது என்று அமைச்சர் கெஹெலிய இங்கு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னணியில், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாகவும் கே.பி விவகாரத்தை அரசு கையாளுகின்ற முறைமையும் அப்படித்தான் என்றும் அமைச்சர் கூறினார்.
குறிப்பாக, புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்கு அழைத்துவந்து ஜனாதிபதி மகிந்த தலைமையில் பேச்சு நடத்தவேண்டிய தேவை அரசுக்கு இருந்துவருவதாகவும் அமைச்சர் கெஹெலிய கூறினார்.
மன்னிப்பு ?
சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள கே.பிக்கு இலங்கை அரசாங்கம் மன்னிப்பு வழங்கிவிட்டதா என்ற கேள்வியை இதன்போது பிபிசி செய்தியாளர் எழுப்பினார்.
‘மன்னிப்பு வழங்குவதா அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறந்துவிடுவதா என்பது அல்ல இங்குள்ள பிரச்சனை. எமக்கு சட்டத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால், அதனை விரிவான சமூக நீதியின் அடிப்படையில் பரிசீலித்து பார்க்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது’ என்றார் கெஹெலிய ரம்புக்வெல்ல.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, இலங்கை அரசு கூட இன்னும் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளாதிருக்கின்ற குமரன் பத்மநாதன் எப்படி அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்திச் செல்கிறார், அதற்கு எப்படி அரசு அனுமதியளித்திருக்கிறது என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது.
‘இந்த பிரச்சனை யுத்தத்தின் மூலம் மட்டும் முடிந்துவிடவில்லை என்ற நிலைப்பாட்டில் தான் அரசு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கிறோம். எல்எல்ஆர்சி பரிந்துரைகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவற்றை நிறைவேற்றியிருப்பது அதற்காகத் தான்’ என்று அந்தக் கேள்விக்கு நேரடியாக அமைச்சர் பதில் கூறாமல் விட்டுவிட்டார் அமைச்சர்.
சாட்சியாளர்?
இதன்போது, கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் கே.பியை அரசின் சாட்சியாளராக கருத இடமிருக்கிறதா என்று கேட்டார்.
‘இதுவரை அப்படித்தான் நடக்கிறது. அவர் முன்வைத்துள்ள சில சில வாக்குமூலங்கள் மற்றும் தகவல்கள் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்துள்ளது’ என்று அதற்கு கெஹெலிய பதிலளித்தார்.
குமரன் பத்மநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், ‘குற்றங்களுக்கு எந்தவித மன்னிப்பும் பெறாத ஒருவர் என்னவென்று ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தை நடத்திச்செல்ல முடியும்’ என்ற கேள்வியை பிபிசி செய்தியாளர் மீண்டும் எழுப்பினார்.
‘குற்றவாளி ஒருவருக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தமுடியாதா? ஏன்முடியாது? அவர் அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்துவதற்கு நாங்கள் தானே அனுமதி தருகிறோம்’ என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்தார்.