08.02.205 ஞாயிறு மாலை அய்யப்பன் கோயில் அரங்கில் வல்வை ஆனந்தன் (நடராஜா ஆனந்தராஜ் – முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ) எழுதிய இரண்டு நூல் வெளியீட்டு விழா இனிது நடைபெற்றது. அடாது பனி பெய்த போதும் மக்கள் அரங்கை நிரப்பி இருந்தார்கள். மிகக் குறிய காலத்தில் அசுர வேகத்தில் நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்தன. நூல்களில் காணப்பட்ட உள்ளடக்கம் ஏற்கனவே உதயன், நமது ஈழநாடு போன்ற ஏடுகளில் வந்தவை. இதற்கு முன்னர் ஆசிரியரது ஆக்கங்கள் 16 புத்தக வடிவத்தில் வெளிவந்தன. அவற்றில் பல வி.புலிகளால் வெளியிடப்பட்டவை. வல்வெட்டித்துறையில் 1991 ஆம் ஆண்டு துண்டுப் பிரசுரங்களை வானில் இருந்து வீசி 48 மணித்தியாலத்தில் ஊரை விட்டு வெளியேறுமாறு இராணுவம் காலக்கெடு கொடுத்தது. அதன் பின் அந்த ஊரையே குண்டுதாக்குதல் மூலம் நிர்மூலமாக்கினார்கள். குண்டு வீச்சில் 10 பேர் இறந்தார்கள். 10 பேர் காயப்பட்டார்கள். 7 வணக்க தலங்கள் 6 கல்லிக் கூடங்கள் நாசமாக்கப்பட்டன. இந்த கொடூர சம்பவத்தை வல்வைப் புயல் பதிவு செய்துள்ளது. இது போலவே சமர் கண்ட முல்லைத்தீவு, வி.புலிகள் தாக்கி அழித்த முல்லைத்தீவு இராணுவ முகாம் சமர் பற்றிய தரவுகளை நான்கு நாட்கள் தவைரின் பணிப்பின் பேரில் நேரில் கண்டு ஆவணப்படுத்தப்பட் ட வரலாற்று நூல். இந்த நூலும் இப்போதுதான் நூல் வடிவில் வெளிவந்தது. விழா ஏற்பாட்டை நூலாசிரியரின் மகன் ஆனந்தராஜ் நவஜீவன் கச்சிதமாக ஒழுங்கு செய்திருந்தார். வாழ்நாட் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் உருத்திரமூர்த்தி சேரன், பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் நயவுரை ஆற்றினார்கள். நூல் அறிமுக உரையை ஈழநாடு வார ஏடு ஆசிரியர் குலசிங்கம் பரமேஸ்வரன் ஆற்றினார். வேலுப்பிள்ளை தங்கவேலு நூல் வெளியீட்டுரை செய்தார்.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய இரு வரலாற்று நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வர்த்தகப் பெருமக்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்கள்.