வல்வைஆனந்தன் அவர்களால் நமது ஈழநாடு மற்றும் யாழ்ப்பாண உதயன் பத்திரிகைகளில தொடராக எழுதப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளை ஆவணப்படுத்திய “சமர் கண்ட முல்லைத்தீவு”, “வல்வைப் புயல்” ஆகிய இரு நூல்களின் வெளியீடு கடந்த 8 ஆம் திகதி கனடா ,ரொறன்ரோ ஐயப்பன் கோயில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நூல்களின் வெளியீட்டு நிகழ்வின், ஆரம்ப நிகழ்வாக கனடாவின் தேசிய கீதமும், தமிழ்மொழி வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்புரையை பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு.கதிர்.செல்வகுமார் அவர்கள் நிகழ்த்தினார். வரவேற்புரையைத்; தொடந்து,பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.அவரது தலமையுரையில்,
திரு.அனந்தராஜ் அவர்கள் எனது மாணவன் என்ற வகையில் நான் பெருமைப் படுகின்றேன். ஆனால் அதற்கும் மேலாக நானும் அவரும் சேர்ந்து சில பொதுப்பணிகளில் ஈடுபட்டபொழுது தான் அவரை அதிகளவில் அறிந்து கொள்ளமுடிந்தது. சமுகத்தின் நலன்களையும் அந்த மக்களின் மன உணர்வுகளையும் ஆழமாக நேசித்த அவரது இலக்கியப் படைப்புக்கள், இன்றும் பலராலும் பேசப்படுகின்றன.அவற்றுள் சில நூல்கள், பல்கலைக்கழக மாணவர்களாலும்,பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்களாலும் துணைநூல்களாகவும் வாசிப்புத் துணை நூல்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.திரு.அனந்தராஜ், தான் நேரடியாகப் பார்த்து மனம் கலங்கிய அவலங்களைதுணிச்சலுடன், நூலுருவாக ஆவணப்படுத்தியமையானது,எதிர்காலச் சந்ததியினர் இன்று நடைபெற்ற எமது வரலாறுகளை அறிவதற்கும், வரலாற்றினை ஆய்வு செய்வதற்கும், பயன்படும் வகையில் உண்மைச் சம்பவங்களை அப்படியே சுவைபட எழுதியிருக்கின்றார்.” என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து,தமிழ் படைப்பாளிகள் கழகத் தலைவரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா இணைப்பாளருமான திரு.வேலுப்பிள்ளை தங்கவேல் (நக்கீரன்) அவர்கள் நூலின் வெளியீட்டுரையையும், அறிமுக உரையை ஈழநாடு பத்திரிகைளின் பிரதம ஆசிரியர் திரு. குலசிங்கம் பரமேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினர்.
அவரைத் தொடர்ந்து, சமர்கண்ட முல்லைத்தீவு நூலின் ஆய்வுரையை பேராசிரியர் வண.பிதா. ஜோசப்.யு.சந்திரகாந்தன் அடிகளாரும், வல்வைப் புயல் நூலுக்கான ஆய்வுரையை, பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,ஏற்புரையை நூல் ஆசிரியர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வழங்கும் பொழுது,
“ சங்க காலத்தில் வாழ்ந்த மக்களினதும்,அரசர்களினதும் வாழ்க்கை முறைகளையும், அவர்களது போரியல் முறைகளையும் அன்றைய புலவர்கள் பாடல்களினூடாகஆவணப்படுத்தியமையினாலேலேயே இன்றைய எமது சந்ததியினர் அவற்றை அறிந்து கொள்வும்,ஆய்வுகளை மேற்கொள்ளவும் முடிகின்றது. அதற்கு ஈடான ஒரு வாழ்க்கை முறை ஒன்று, எமது மண்ணிலும் நடைபெற்றிருக்கின்றது என்பதை நாளைய எமது சந்ததியினரும், அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது இன்றைய எமது படைப்பாளிகளின் கடமை என்பதை உணர்ந்து காலத்தின் தேவை அறிந்து செயற்படவேண்டும்.
அந்த வகையிலேயே கடந்தகால போராட்டங்களின் போது மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்,அந்தப் போராட்டத்தில் அவர்களுடைய பங்கு எவ்வாறு இருந்தன என்பதை ஆவணப்படுத்தும் வகையிலேயே” வல்வைப் புயல்” என்ற நூலையும், “சமர்கண்ட முல்லைத்தீவு” என்ற நூலையும் ஆவணமாக்கியுள்ளேன்.இது ஒரு குறித்த கிரா மத்தில்மட்டும் நடைபெற்ற நிகழ்வாகப் பார்க்காது, ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்ற ஒரு நிகழ்வாக நினைத்துப் பார்த்தால்,இந்தப் போரின் விளைவுகள் இலங்கையில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழர்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறியலாம். இவை எமது தமிழ் இனத்தின் ஒரு குறியீடாகவே பார்க்கவேண்டுமே யொழிய இதனை குறிப்பிட்ட நகரங்களுக்கான வரலாறாகப் பார்க்கக்கூடாது. இந்த இரு நூல்களும் எதிர்காலத்தில் எமது சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாகவே கையளித்துள்ளேன்.” என்று குறிப்பிட்ட அவர், இந்த இரு நூல்கள் எழுதப்பட்ட சூழலைப் பற்றியும் எடுத்துரைத்தார்.அவரது ஏற்புரையைத் தொடர்ந்து, திரு.அ.நவஜீவன் அவர்களின் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது.