13வது திருத்தத்தை அகற்றினால்! அரசுக்கு எதிராக பாரிய நடவடிக்கை எச்சரிக்கும்: TNA துரைராஜசிங்கம்

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை அரசாங்கம் இரத்துச் செய்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர் 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கு ஒரளவு அதிகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறுமாயின் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மேலும் இல்லாமல் போய்விடும்.

13வது அரசியல் அமைப்புத்திருத்தம் நாட்டின் நிரந்த சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக அதனை எதிர்க்கும் அரசாங்கத்தில் உள்ள தரப்பினர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு ஆரம்பகாலம் முதலே தீர்வுகளை வழங்க உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. எனினும் அவை அனைத்தும் கழித்தெறியப்பட்ட வரலாறே இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் நாட்டில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளாகும்.

தமிழர்களின் உரிமைகளுக்காக எந்த அரசியல் தீர்வையும் வழங்கக் கூடாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் குறித்து சர்வதேச ஏற்கனவே தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எந்த விதத்திலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய இடமளிக்கக் கூடாது எனவும் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.