இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை தொடர்பில், தம்மிடம் போதிய அளவு ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, உரையாற்றிய சட்டரீதியற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பானவைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த ஆதாரங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது பயன்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது பருவ கால அறிக்கை சமர்ப்பிக்கபடும் போது, உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகள் மாத்திரமே கருத்து வெளியிட கால அவகாசகம் வழங்கப்படும். எனவே இதனை அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கை தொடர்பில் தாம் விசேட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.