13ஆவது திருத்தத்தை பிரபாகரனே நிராகரித்திருந்தார், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏன் ஆடுகிறது என்பது மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் தெரிவித்தார்.
உத்தியோக பூர்வமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்புச் செயலர் அங்கிருந்து வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செவ்வியின் விவரம் வருமாறு:
கேள்வி: இந்தியாவுக்கான உங்கள் பயணத்தின் போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா?
கோத்தபாய: இல்லை. அப்படி எதுவுமே பேசப்படவில்லை.
கேள்வி: 13 ஆவது திருத்தம் பற்றி இந்தியா உங்களிடம் கருத்துகளை கேட்டறியவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தனவே?
கோத்தபாய: நான் ஓர் அரச அதிகாரி. அவர்கள் என்னிடம் எப்படி அரசியல் பேசுவார்கள்? பரஸ்பர பாதுகாப்பு விடயங்கள் பற்றி நாங்கள் வழமையாகச் சந்தித்துப் பேசுவோம். அதுபோலதான் இம்முறைச் சந்திப்பும் நடந்தது.
கேள்வி: 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீங்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்ததால், உங்களிடம் அவர்கள் இது பற்றி பேசுவார்கள் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றீர்களா?
கோத்தபாய: நிச்சயமாக. 13ஆவது திருத்தம் தொடர்பிலான எனது கருத்து நான் உறுதியாகத்தான் இருக்கின்றேன். 13 ஆவது திருத்தமானது பிரபாகரனின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார். அன்று பிரபாகரன் இருந்தபோது பேச வக்கில்லாமல், துணிச்சலில்லாமல் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது 13ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுப்பதும், கூக்குரலிடுவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.
கேள்வி: அப்படியானால், 13ஆவது திருத்தம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக. நிர்வாக ரீதியாக சில பிரச்சினைகளுக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால், யதார்த்தமான, நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வை இந்தத் திருத்தம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை.
கேள்வி: வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட்ட வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பு, இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருந்நது. உங்களது இந்தப் பயணத்தின்போது இதுதொடர்பில் இந்தியா ஏதாவது அழுத்தங்கள் இருந்ததா?
கோத்தபாய: அப்படியான எந்த அழுத்தங்களையும் இந்தியா வழங்கவில்லை. அப்படி வழங்கவேண்டிய தேவையும் இந்தியாவுக்குக் கிடையாது. தமிழ்க் கூட்டமைப்பு பிரச்சினைகளை உருவாக்குகிறது. நாட்டின் வடக்கிலானாலும், தெற்கிலானாலும் பாதுகாப்புக்காக படைமுகாம்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்று வந்துவிட்டால் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று பார்க்க முடியாது.
இந்தியாவின் முக்கிய படைத்தளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனவே. எவராவது, தமிழ்நாட்டிலிருந்து அவை அகற்றப்படவேண்டும் என்கிறார்களா? தமிழ்க் கூட்டமைப்பு புலிகளைவிட மோசமாகச் செயற்படுகின்றது. எவரின் அழுத்தங்களுக்கும் பணிந்து நாம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கமாட்டோம்.
இப்போது 13ஆவது திருத்தம் பற்றி கூட்டமைப்பு கூக்குரலிடுகிறது. வடக்கு, கிழக்கில் படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்று 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதா? தமிழ்க் கூட்டமைப்பு தனது வேடத்தைக் கலைத்து நேர்மையாகச் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.