புதுடெல்லி : மத்திய அமைச்சரவை இதுவரை இல்லாத அளவு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. 22 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இவர்களில், நடிகர் சிரஞ்சீவி உட்பட 17 பேர் புதுமுகங்கள். ஆந்திராவுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் நேற்று நடந்தது. இந்த மாற்றத்துக்காக 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இதுவரை இல்லாத அளவாக மொத்தம் 22 பேர் பதவி ஏற்றனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவி ஏற்றவர்களில் 17 பேர் புதிய அமைச்சர்கள், 5 பேர் இணை அமைச்சர்களாக இருந்து கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். அவர்கள் விவரம்:
கேபினட் அமைச்சர்கள்: கே.ரகுமான்கான், சந்திரேஷ் குமாரி கட்டோச். இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு): நடிகர் சிரஞ்சீவி, மனீஷ் திவாரி.
இணை அமைச்சர்கள்: சசி தரூர், கே.சுரேஷ், தாரிக் அன்வர், கே.ஜெ.சூர்யபிர காஷ் ரெட்டி, ராணி நரா, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.எச்.கான் சவுத்ரி, எஸ்.சத்யநாராயணா, நினாங் எரிங், தீபா தாஸ்முன்ஷி, பல்ராம் நாயக், லால்சந்த் கட்டாரியா, க்ருபாராணி. இணை அமைச்சராக இருந்து கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றவர்கள்: பல்லம் ராஜு, அஸ்வனி குமார், ஹரீஷ் ராவத், தின்ஷா படேல், அஜய் மாகென். புதிதாக பதவி ஏற்றவர்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரிக் அன்வரை தவிர மற்ற அனைவரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். அமைச்சரவை மாற்றத்தில் ஆந்திராவுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களில் சிரஞ்சீவி உள்ளிட்ட 4 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.
பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சராவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று பதவி ஏற்கவில்லை. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு தரப்படும் என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து புதிய அமைச்சர்களின் இலாகா விவரம் அறிவிக்கப்பட்டது. மேலும் பல அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டன. புதிதாக கேபினட் அமைச்சராக பதவி ஏற்ற ரகுமான்கான் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்தவர். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு புதிய கேபினட் அமைச்சரான சந்திரேஷ் குமாரி கட்டோச்சுக்கு கலாச்சார துறை தரப்பட்டுள்ளது.
இணை அமைச்சர்களாக இருந்து பதவி ஏற்றம் பெற்று கேபினட் அமைச்சர்களான தின்ஷா படேலுக்கு சுரங்கத்துறையும், அஜய் மாகெனுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறையும், பல்லம் ராஜுவுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும், அஸ்வனி குமாருக்கு சட்டத் துறையும், ஹரீஷ் ராவத்துக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய இணை அமைச்சர்களில் மனீஷ் திவாரிக்கு தகவல் ஒளிபரப்பு துறையும், நடிகர் சிரஞ்சீவிக்கு சுற்றுலா துறையும் தனிபொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் சர்ச்சையால் கடந்த 2010ல் வெளியுறவு துறை இணை அமைச்சர் பதவியை இழந்த சசிதரூருக்கு இந்த முறை மனித வள மேம்பாட்டு துறை தரப்பட்டுள்ளது.
இணை அமைச்சர்களில் ராகுலின் ஆதரவாளர்களான ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதேந்திர சிங் ஆகிய 3 பேருக்கு தனிபொறுப்பு தரப்பட்டுள்ளது. சட்டத் துறை அமைச்சராக பதவி வகித்த சல்மான் குர்ஷித் வெளியுறவு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கம்பெனி விவகாரத்துறையை கவனித்த வீரப்ப மொய்லி பெட்ரோலிய அமைச்சராக்கப்பட்டுள்ளார். பெட்ரோலிய இலாகாவை கவனித்து வந்த ஜெய்பால் ரெட்டி அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்.
நீர்வளத் துறை அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சாலுக்கு ரயில்வே இலாகா கிடைத்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறையை கவனித்து வந்த குமாரி செல்ஜா சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கமல்நாத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்ற விவகாரத்துறையை பவன்குமார் பன்சால் கவனித்து வந்தார். தகவல், ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகனுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை தரப்பட்டுள்ளது.