Search

மாவீரர் வாரம்! நிஜமும் நிழலும்

இந்தமுறை நாங்கள் 2 மாவீரர் வாரம் கொண்டாடப் போறோம். ஒரு மாவீரர் வாரத்தைக் கட்டாயப்படுத்தியும் இன்னொரு மாவீரர் வாரத்தை மனசுக்கையும் கொண்டாடவைக்கிறாங்கள் வன்னியில் உள்ள அனேகர் தமக்கிடையே இந்த வார்த்தைகளையே இப்போது அடிக்கடி உச்சரிக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டு இலத்திரனியல் உற்பத்திகளுக்கே மவுசு அதிகம். ஏனெனில் அவர்களே நவீன உபகரணங்களை முதலில் கண்டு பிடிப்பதுடன் சந்தைக்கு தரமான பொருள்களை அனுப்பி வைப்பார்கள்.

அதனால் இலத்திரனியல் பொருள்களை வாங்கும்போது “ஜப்பானில் செய்ததா?” என்று கேட்டு உறுதிப்படுத்திய பின்னரே வாங்குவார்கள். இது மக்களின் இயல்பில் ஊறிப் போன ஒன்றாக மாறியிருந்தது.

இவ்வாறு ஜப்பான் பொருள்களுக்கு எப்போதுமே மங்காத மவுசு இருப்பதைக் கண்ட ஏனைய நாடுகள் மலிவு விலையில் அதேபோன்று பொருள்களை சந்தைக்கு விட்டன.

ஆனாலும் விலை குறைவென்பதற்காக அந்தப் பொருள்களை வாங்க மக்கள் தயராக இல்லை. அவர்கள் இப்போதும் ஜப்பான் உற்பத்திகளுக்கே தமது நுகர்வில் முதலிடம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு விடயத்தை அப்படியே பிரதி பண்ணி வரும் போலிகளுக்கு ஆயுள் கெட்டியானதல்ல. பட்டாம்பூச்சி போல ஏழு எட்டு நாள்களுக்குள் சாயம் போய்விட போலிகள் குப்புறக் கவிழ வேண்டியது தான்.

பொருள்களுக்கு மட்டுமே போலிகள் வந்த காலம் போய் இப்போது நிகழ்வுகளுக்கும் போட்டியாக போலி நிகழ்வுகள் உருப்பெறத் தொடங்கிவிட்டன.

புலிகளின் மாவீரர் வாரத்துக்குப் போட்டியாக, அதற்கு முந்தைய வாரத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த தினம் மற்றும் போர் வெற்றியின் மூன்று ஆண்டு நிறைவு என்பவற்றைக் கொண்டாட படைத்தரப்பு முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இது ஓர் அரசின் போலி மாவீரர் தினம் தான்.

கார்த்திகை மாதம் என்றவுடனேயே தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்லறைகளும் அங்கே ஒளிவிடும் தீபங்களும், உலகை உற்றுப்பார்க்க வைக்கும் ஓர் உரையும்தான். வருடம் முழுவதும் இதற்காகவே காத்திருந்தது போல, மாவீரர் வாரத்தில் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுப் பெருக்கு மேலிட, உரிமைக்காக களமாடி உயிர் நீத்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்களின் கல்லறையில் தீபம் ஏற்றி மனதுக்குள் உருகிப் போவார்கள் தமிழர்கள்.

நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான மாவீரர் வாரத்திலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமும் வருகின்றது. அத்துடன் விடுதலைப்புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள், கொள்கைகள் என்பன பற்றி விளக்கி தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் மாவீரர் தின உரையும் மாவீரர் வாரத்தின் கனதியை அதிகரித்திருந்தது.

எனினும் தமிழர் பகுதி தவிர்ந்த இலங்கையின் ஏனைய பாகங்களிலும் படைமுகாம்களிலும் மாவீரர் வாரம் இதற்கு எதிர்மறையானதாகவே அமைவதுண்டு. எங்கும் சீருடைக்காரர்கள் குவிக்கப்பட்டு, நீக்கமற கண்காணிப்பு விழிகள் தூக்கத்தை மறந்து துருவித் துருவி விசாரிப்புகளில் இறங்கத் தொடங்கும். சந்தேக நிழல் படியும் இளைஞர்கள் எல்லோருக்கும் சிறப்புப் பரிசாக சிறைவாசம் காத்திருக்கும். எப்போது பாய்ச்சல் நிகழுமோ? என்ற பயத்தில் பேதி குடிக்காமலே படைகளுக்கு இந்த வாரம் முழுதும் வயிறு கலங்கிக் கொண்டேயிருக்கும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு மாவீரர் வாரத்தை புலம் பெயர் தேசங்களில் மட்டுமே வெளிப்படையாக அனுஷ்டிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆயினும் வெளிப்படையாக தீபங்களை ஏற்றாவிட்டாலும் மனதுக்குள் பூசலாரைப்போல கல்லறைகளுக்கு ஒளியேற்றி நினைந்துருகினார்கள் மக்கள்.

இந்த நிலையில் தான் இன்னொரு மாவீரர் வாரம் பற்றிய பிரகடனத்தை அதிகாரத்தரப்பு அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறது. நவம்பர் 26 இல் பிரபாகரனின் பிறந்தநாள். அதேபோன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்ததினம் நவம்பர் 18. தனது பிறந்த நாளை மையப்படுத்தியே புலிகளின் தலைவர் மாவீரர் வாரத்தை பிரகடனம் செய்ததாக காலாதிகாலமாக ஆளும்தரப்பு பிதற்றிக்கொண்டிருக்கிறது.

ஆகவே புலிகளுக்குப் பதிலடியாக, அவர்களின் பாணியில் தாமும் ஒரு மாவீரர் வாரத்தை கொண்டாடினால் என்ன என்று மஹிந்த வாதிகள் “ரூம்” போட்டு யோசித்ததன் விளைவே இரண்டாவது மாவீரர் வாரம். நாட்டின் தலைவர் மஹந்தவின் பிறந்த நாளை உள்ளடக்கிய நவம்பர் 12 தொடக்கம் 19 வரை சிறப்புப் பூசைகளை ஆலயம் எங்கும் நடத்துமாறு வன்னி மக்களுக்கு கண்டிப்பான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒவ்வொரு நவம்பரும் மக்கள் வற்புறுத்தலின் பேரில் மாவீரர் வாரத்தைக் கொண்டாடியதில்லை. விடுதலைப் போரில் ஆகுதியாகி மண்ணுக்குள் புதைந்திருக்கும் தம் பிள்ளைகளை ஒளியின் வடிவில் காணும் நாளாகவே மாவீரர் நாளை மக்கள் பார்த்தனர். இதனால் தாமாகவே மாவீரர் வாரத்தை எழுச்சியூட்டும் நிகழ்வாக மாற்றினர்.

நவம்பர் 27 ஆம் திகதி 6 மணிக்கு சர்வாலயங்களிலும் மணி ஒலிக்க ஏற்றப்படும் தீபம் மக்களின் மனங்களில் அது நாள் வரை படிந்து கிடந்த துயர இருளை போக்கும். விசேட பூசைகள், மத வேறுபாடின்றி எல்லாத் தலங்களிலும் அமோகமாக நடந்தேறும். பிரதான வீதிகளில் மாவீரர்களின் ஈகத்தைச் சொல்கின்ற அலங்கார வளைவுகள் போட்டி போட்டுக் கொண்டு முளைத்திருக்கும்.

இவையெல்லாமே இயல்பாகவே நடந்தேறியவை. ஆனால் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இப்போது வலிந்து, வற்புறுத்தலின் பேரில் தாமும் ஒரு மாவீரர் வாரத்தைக் கொண்டாட முனைகிறார்கள். நவம்பர் மாதத்தில் பிறந்தார் என்ற காரணத்துக்காக அரச தலைவரின் அகவை நிறைவுக் கொண்டாட்டத்தில் ஒரு வாரத்துக்கு வன்னி மக்களை பங்கேற்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வற்புறுத்தலின் பேரில் உற்பத்தியாகும் எந்தவொரு விடயமும் உள்ளார்ந்தமான அர்த்தப் பெறுமானத்தை கொண்டிருப்பதில்லை. அது திணிப்பின் பேரில் ஏனோ தானோ என்ற ரீதியிலேயே அமைந்திருக்கும். அதுபோலவே புலிகளின் மாவீரர் வாரத்துக்கு முன்னதாக தாமும் ஒரு மாவீரர் வாரத்தைக் கொண்டாட முனையும் அதிகாரத் தரப்பின் செயல் அமைந்திருக்கிறது.

ஆனாலும் எல்லாப் போலிகளுக்கும் நிகழ்ந்த கதியே மாவீரர் வாரப் போலிக்கும் நிகழ்வதை வரலாற்றின் பக்கங்கள் பதிவு செய்யத்தான் போகின்றன. நிழல்கள் ஒளியற்றுப் போன காலத்தில் அழிந்து விடும். நிஜங்கள் தான் என்றைக்குமே நிலைத்தலோடு வாழ்ந்திருக்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *