இலங்கைத் தீவில் ’ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இன அழிப்பே’ என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனை மையமொன்று கருத்தினை வெளியிட்டுள்ளது.
அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை நோக்குவதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது.
பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பிரான்சின் அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி வருகின்ற உயர்கல்வியாளர்களை பிரதிநிதிகளாக் கொண்ட கருத்துருவாக்கச் சிந்தனைமை மையமொன்று கடந்த சனிக்கிழமை பிரென்சு பாராளுமன்ற வளாகக் கூடமொன்றில் கருத்தரங்கொன்றினை நடாத்தியிருந்தது.
சர்வதேச விவகாரம் தொடர்பில் இக்கருத்தரங்கில் பேசப்பட்டபோது, பிரென்சு அரச மட்டம் எடுக்க வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு நடந்தேறி வரும் கொடுமைகள் குறித்து காத்திரமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய கட்டாயத்தினை வலியுறுத்தியிருந்தது. அத்தோடு தமிழர்கள் மீது நடப்பது ஒர் இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பெரும் இன அழிப்பினை எதிர்கொண்டுவரும் தமிழர்களுக்கான, அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அங்கீகரித்துக் கொள்வதாகவும் இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இச்சிந்தனை மையத்தின் 2013ம் ஆண்டுக்கான சர்வதேச விவகாரம் தொடர்பிலான பிரதான வேலைத்திட்டமாக தமிழர்கள் விவகாரமே உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் தலைமையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொண்டனர்.
பிரான்சு உயர்கல்வி மாணவ சமூகத்தின் முக்கியமானதொரு சிந்தனை மையமொன்றில் இருந்து தமிழர்கள் தொடர்பில் இவ்வாறானதொரு கருத்து வெளிவந்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளதென தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம், தமிழர்கள் மீது நடந்தேறுவது ஓர் இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டிருப்பதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வெளிப்படையான அங்கீகாரம் இதில் முக்கியமான விடயங்களாக உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.