நியூயார்க்: அமெரிக்காவை உலுக்கி எடுத்து வரும் சான்டி புயலால் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 62 லட்சம் பேர் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல், கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியிருக்கிறது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு வீழ்ந்தன.
நியூயார்க் உள்பட கிழக்கு அமெரிக்க மாகாணங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரம் இன்றி 62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அணு உலைகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் மூடப்பட்டு, 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க்கில் பள்ளிகள் 2-வது நாளாக மூடப்பட்டிருக்கின்றன.
கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ். நியூயார்க், நியூஜெர்ஸி, பென்சில்வேனியா, ரோத் தீவு பகுதிகளில் அவசரநிலைப் பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சான்டி புயலால் மொத்தம் ரூ1 லட்சத்துக்கு 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நியூயார்க் பங்குச் சந்தை 2-வது நாளாக இயங்கவில்லை.
அமெரிக்காவில் உள்ள குருத்வாராக்கள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசரகால தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச சீக்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.