இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலு எம்.பி.யும் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து‘டெசோ’ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார்கள்.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்”அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும்,கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.
அப்போது ஐ.நா. மன்றத்தின் துணை பொதுச்செயலாளர் யான் லியாசன் மு.க.ஸ்டாலினிடம், ‘‘அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கை சீற்றத்திற்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு என்னைச் சந்திக்க வந்திருக்கின்ற இந்த நிகழ்ச்சி ஒன்றிலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் உங்கள் தலைவரும், நீங்களும் எந்த அளவிற்கு மனித நேயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன்’’ என்றார்.
தமிழ் இன உணர்வுகள்
அப்போது மு.க.ஸ்டாலின் ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம், “எங்கள் தலைவர் கருணாநிதிக்கு இப்போது வயது 89. இதில் 75 ஆண்டுகளாக அவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உலகெங்குமுள்ள தமிழர்களுக்காகவும், தமிழ் இன உணர்வுகள் பாதுகாக்கப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவும், எங்கள் தலைவர் கருணாநிதியும் 1958–ம் ஆண்டு முதல் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார்.
இதற்காக சிறை சென்றும் தியாகம் புரிந்து உள்ளார். மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர்’’ என்றார்.
அப்போது, ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன்,”இலங்கை தமிழர் பிரச்னையில் உங்கள் தலைவரும், நீங்களும் ஐ.நா. மன்றம் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்”என்று கேட்டார்.
இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம்
அதற்கு மு.க.ஸ்டாலின்,”இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், கெளரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேலும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இலங்கை ராணுவம் தவறான முறையில் நடத்துகின்றது. இதற்கு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
பொதுவாக்கெடுப்பு
அதைக் கேட்ட யான் லியாசன், ‘‘நீங்கள் அளித்துள்ள இந்த தகவல் மிக மிக முக்கியமானது. இந்த பிரச்னைக்கு ஐ.நா.மன்றம் எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து எங்கள் (ஐ.நா. மன்றம்) பொதுச்செயலாளரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்” என்றார்.
இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், ‘‘இலங்கை போரினால் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் விரும்பியபடி இலங்கையில் குடியுரிமை பெற்றுத் தர வேண்டும். அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழர்கள் அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட அவர்கள் விருப்பப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.
நம்பிக்கை
அப்போது ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன், ‘‘இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் எந்த நிலையில் இருக்கிறார்கள்’’ என்றார்.
அதற்கு மு.க.ஸ்டாலின், ‘‘இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் இலங்கை பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த பிரச்சினையில் ஐ.நா. மன்றம்தான் சரியான தீர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடைபெற்ற பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
மேலும் மு.க.ஸ்டாலின், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் வாழ்த்து கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் உடன் இருந்தார்.இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை சுமார் 28 நிமிடம் நடைபெற்றது” என்று கூறப்பட்டு உள்ளது.