ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவதனை விடவும் சிரிய நிலைமைகள் குறித்து உலக நாடுகள் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென கட்டார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடுநிலையாக செயற்படவில்லை என பெலரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் நவனீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்த போதிலும் இதுவரையில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது.
நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு இலங்கை அரசாங்கம், நவீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை நிலைமை குறித்து அறிக்கை எதிர்வரும் 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளன.