தமிழர்களின் ஆன்மாவின் சாட்சியாக கிளிநொச்சியில் “தேசத்தின் குரல்” பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற மகுட வாசகத்தைத் தாங்கி அறிவகத்தின் வெளியீடான “தேசத்தின் குரல்” எனும் பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளிவந்துள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று மதிய மத அனுட்டானங்களின் பின் வெளியிடப்பட்டுள்ளது. பா.உறுப்பினர் சி.சிறீதரன் இதை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
“அனுபவங்களை தழுவி அறிவு எனும் பேராயுதத்தின் பின்னே தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றிணைத்து, பாதுகாப்பு மிகுந்த எதிர்காலம் ஒன்றை எமது சந்ததிக்கு பெற்றுக்கொடுக்கும் அரசியல் பயணத்தின் பங்காளிகளாக தேசத்தின் குரலும் தொடர்ந்து வரும். அன்பு மக்களின் ஆசிகள் இருக்கும் வரை தமிழர் கனவுகள் மெய்ப்பட எழுதுவோம். உணர்த்துவோம்” என ஆசியர் தனது கன்னி ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வசமா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்ளது.