வன்னிப் பிராந்தியத்தை முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படை என்ற பெயரில் தமிழ் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு படையினருடன் இணைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் கடுகதி வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
பாடசாலைவிட்டு இடைவிலகிய மாணவர்களை 18 ஆயிரம் ரூபா சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டி சிவில் படையில் இணைக்கும் செயற்றிட்டங்களை இராணுவ தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக சில மாணவர்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்தியும், இடைவிலகியவர்களும் பாடசாலைகளிலிருந்து நற்சான்றிழ்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்களிலுள்ள வாலிப வயதுடைய இளம் பெண்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து கொள்ளுமாறு இராணுவம் வற்புறுத்தி வருகின்றது.
இவ்வாறு சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சில பெண்கள் இராணுவத்தினருடன் பழகுவதற்கும் அவர்களுடன் தமது நேரங்களை செலவழிப்பதற்கும் திட்டமிட்ட வகையில் அரசினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் போதிய சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் சிலர் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களையும், தொண்டராசிரியர்களையும் கல்வி அதிகாரிகளின் பெயர்களை பாவித்து அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்.
போதிய சம்பளத்தை கல்வி அமைச்சின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கமுடியாது எனத் தெரிவிக்கும் அரசு, திட்டமிட்ட வகையில் எமது தேசியத்தை சிதைக்கும் நோக்குடன் 18 ஆயிரம் ரூபா சம்பளம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி சிவில் படையில் இணைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுவர்களின் பணி என்னவொன்று இதுவரையில் தெரிவிக்கப்படாத போதும், அரசாங்க அரசியல்வாதிகளின் பிரசாரங்களுக்கு பொதுமக்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும் என இவர்களை வற்புறுத்தி அனுப்பி வைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைகளுக்கு அடிபணிய மறுப்பவர்களையும் அச்சுறுத்தியும் இந்நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.
தமிழர்களின் தேசியத்தையும், மரபுவழிக் கலாசாரங்களையும் பண்பாடு விழுமியங்களையும் சிதைத்து அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக்கி கைகட்டி நின்று வேலை செய்யும் அடிமைகளாக்கும் நோக்கிலேயே இத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக இராணுவத்தினரின் வெறிக்காக தமிழ் இளம் பெண்களை இலக்குவைப்பதோடு திட்டமிட்டவகையில் கலாசார பிறழ்வை ஏற்படுத்த அரசாங்கம் முனைந்து வருகின்றது.
இராணுவத்தினருடன் பெண்களை நெருக்கமாக்குவதன் மூலம் தமிழர்கள் என்ற அடையாளத்தை சிதைத்து புதிய இனக்குழுமம் ஒன்றை உருவாக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்தினதும், இராணுவத்தினரது இச்சதிவலையிலிருந்து எமது மக்களையும் எமது இளம் சமூதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். இதற்காக திட்டமிட்ட வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.