போரின்போது காணாமல் போன 146, 000 தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை பொறுப்புக் கூறவில்லை. சரணடைந்த தமிழ் அகதிகள் சர்வதேச விதிமுறைக்கமைய மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளன என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை சர்வதேச பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஜெனிவாவில் 14வது பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதல்நாள் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான இலங்கையின் அரசசார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் கூட்டம் ஒன்றை ஜெனிவா கேட்போர் கூடத்தில் நடத்தின. அதில் பல நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்ப யோசப் ஸ்கைப் இணையத்தளத்தினூடாகத் தமது உரையை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையானது அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவர் தொடர்ந்த கருத்து தெரிவித்த போது,
போர் முடிந்ததின் பின் தமிழர்கள் மிகப்பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். பெரும்பாலான தமிழ் அகதிகள் சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் காடுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார வசதிகள் உட்பட வாழ்வாதாரத்திற்கேற்ற எந்த ஒரு வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை. விவசாயமும் முடக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரச் சமூகத் தொடர்புகளில் பெரிதும் பாதிக்கப்பட்டள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தற்போது தெற்கிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளதாக இலங்கை மனித உரிமைப் பொறுப்பாளர் திருமதி நிமல்கா பெர்னாண்டோ இங்கு குறிப்பிட்டார். நாட்டின் மிக முக்கிய ஜனநாயகப் பொறிமுறையான நீதிச் சுதந்திரம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கில் பெருவாரியாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இராணுவ முகாம்கள், குடிசார் நிர்வாக முறைக்கு பெரும் சவாலாகவே அமைகின்றன என மேலும் இங்கு உரையாற்றிய மனித உரிமை அமைப்புக்களைச் சோ்ந்தோர் குறிப்பிட்டனர். இலங்கை சர்வதேசக் கூட்டங்களில் வழங்கும் வெற்று வாக்குறுதிகளை நாடுகள் ஒருபோதும் நம்பக்கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நல்ல சந்தர்ப்பங்களை இலங்கை தவறவிட்டுவிட்டதாக கனடா, பிரித்தானிய தமிழ் அமைப்புகளின் இணைப்பாளர் கலாநிதி யசோ நற்குணம் சுட்டிக்காட்டினார். மொத்தத்தில் இம்முறை ஜெனிவா மாநாடு இலங்கைக்க ஒரு அக்கினிப் பரீட்சையாகவே அமைந்தது என புலம்பெயர் ஊடகங்கள் பல குறிப்பிட்டுள்ளன.