வாஷிங்டன் : உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒபாமா மீண்டும் அதிபராவாரா அல்லது அவரை எதிர்த்து போட்டியிடும் மிட் ரோம்னிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் ஒபாமா பதவிக்காலம் ஜனவரியில் முடிகிறது. புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர், துணை அதிபர் தேர்தல் நடைபெறும்.
அந்நாட்டு அரசியல் சட்டப்படி பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும், செனட் சபைக்கு 100 பேரும், வாஷிங்டன் பிரதிநிதிகள் 3 பேருமாக 538 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ஓட்டு போட்டு, அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது.
அதிபர், துணை அதிபர் தேர்தல் மறைமுக தேர்தல் என்றாலும், நமது மக்களவையை போல் அதிக மக்கள் பிரதிநிதிகள் எந்த கட்சிக்கு கிடைத்துள்ளதோ, அந்த கட்சி வேட்பாளர்களே அதிபர், துணை அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. எனவே, இன்று நடைபெறும் தேர்தலிலேயே எந்த கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் கிடைக்கிறார்கள் என்பது தெரிந்து விடும். 538ல் 270 பிரதிநிதிகளை பெறும் கட்சி வேட்பாளரே அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
தற்போதைய அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான பராக் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. கடைசியாக வந்த கருத்து கணிப்புகளில் இருவருக்குமே சமபலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ரியல் கிளியர் பாலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் கணிப்பில் ரோம்னியை விட ஒபாமா 0.1 சதவீதமே முந்தியுள்ளார். ‘சிஎன்என் போல்‘ நடத்திய கணிப்பில் ஒபாமாவுக்கு 48 சதவீதமும், ரோம்னிக்கு 47 சதவீதமும் தரப்பட்டுள்ளது.
கணிப்புகளில் ஒபாமாவுக்கு ஆதரவு ஓரிரு சதவீதம் அதிகமாக உள்ளதால் அவரே மீண்டும் அதிபராவாரா அல்லது ரோம்னிக்கு கடைசி நேரத்தில் ஆதரவு பெருகி அதிர்ஷ்டம் அடிக்குமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பிரசாரம் முடிந்தது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. நாளையே முடிவுகள் தெரிந்து விடும். இந்திய நேரப்படி பார்த்தால் நாளை நள்ளிரவில் முடிவு தெரியும்.