கடந்த வியாழக்கிழமை இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 அங்கத்துவ நாடுகள் தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தன.
இந்நாடுகளது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இன்றைய அமர்வில் தங்களது பரிந்துரை அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.
இதில் சர்வதேச நாடுகள் சமர்ப்பித்திருந்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக மனித உரிமை பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – பிரான்ஸ் போன்ற பல மேற்குலக நாடுகள் தாங்கள் சமர்பித்த பரிந்துரைகளை இலங்கை நிராகரிந்துள்ளமை குறித்து தங்களது கண்டனத்தினை தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டினை தெரிவித்திருந்த இந்தியா இம்முறை மௌனம் காத்திருந்ததோடு ஒரு பரிந்துரையினையும் அது முன்நிறுத்தவில்லை.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக விசாரணை நடத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களை மட்டும் தாம் ஏற்றுக்கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் இன்றைய நிலைப்பாடானது அனைத்துல சமூகத்தினை ஏமாற்றும் சிங்கள தேசத்தின் இன்னுமொரு சர்வதேச மோசடியென ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.