பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தமிழர் மகாநாட்டில் ஸ்ரீலங்கா அரசினால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும், தற்பொழுது நடைபெறுவதும் இனப்படுகொலை என்பதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வேண்டுகோளினை முன்வைத்துள்ளது.
எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒழுங்கமைப்பில் பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவினருடன் இணைந்து, உலகத் தமிழர் பிரதிநிதிகள் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ள மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவித்து, அதன் ஏற்பாட்டாளர்களினால் தயாரிக்கப்பட்ட தீர்மானங்களை பலரின் அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி, இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த மகாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் முக்கியமான சில அடிப்படை விடையங்களை உள்ளடக்கத் தவறியுள்ளமையினை சுட்டிக்காட்டி குறிப்பாக: இலங்கை சுதந்திரம் அடைந்தத நாள் முதல் ஈழத்தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால், இனப்படுகொலையை உள்ளடக்கி அத் தீர்மானத்தில் வலியுறுத்தி குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள் தொடர்பான தகவல்களை முன்மொழிந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் பிரித்தானியா தமிழர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் புறக்கணிப்பு என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவிடமிருந்து சிங்களவர்களிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டத்தில் இருந்தே (இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல்) தமிழினம் என்ற ஓர் இனத்தை இலங்கையில் இல்லாமல் செய்து விடவே சிங்களம் இன்றுவரை முயன்று வருகிறது.
தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான தாயக நிலப்பரப்புக்களில் ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியமர்வுகளால் தனது புவியியலை இழக்கு அளவுக்கு தமிழர் தாயகம் சிங்களவர்களால் சிதைக்கப்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானியாவில் நடைபெறவுள்ள குறிப்பிட மகாநாட்டில் பின்வரும் தீர்மானங்களை இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வேண்டுகோள் விடப்பட்டிள்ளது.
இந்தக் கருத்துக்களை இந்த மகா நாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழீழத் தனியரசு உருவாகுவதை விரும்பும் அனைவரிடமும் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டு வருவது திட்டமிட்ட இனவழிப்பு என்பதை வலியுறுத்துமாறு உன்தமிழ். இணையமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
*தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
*தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியம் அழிக்கப்பட்டு அவர்களது கல்வி புறக்கணிக்கப் படுகிறது.
*தமிழ் மக்களின் தன்னிலை வாய்ந்த பொருளாதாரம் கையறு நிலைக்கு தள்ளப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
*தமிழர் தாயகம் புத்தமயமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மக்கள் இந்தப் போக்கினை ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக எதிர்த்த போது சிறிலங்க அரசு அவர்கள் மீது வன்முறையையும் சாவையும் கட்டவிழ்த்து விட்டது.
இந்தச் சுழ்நிலையில் தான் தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை தொடங்கி சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பை எதிர்த்துப் போராடியதோடு மட்டும் நின்றுவிடாமல் தமது தமது தேசத்துக்குரிய அரசியல் ரீதியிலான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளையும் முன்னிறுத்தி ஒரு நிழல் அரசாட்சியும் நடத்திவந்தனர்.
இந்த நிகழ்வுப் போக்கின் போது தமிழ் தேசத்தின் இருப்பானது திட்டமிட்டமுறையில் சுருக்கப்பட்டது. அதே வேளையில் பயங்கரவாதத்துகு எதிரான போர் என்ற போர்வையில், சிறிலங்கா அரசு சிங்களவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்தது.
தற்போது தமிழர்களின் ஆயுத வழியிலான போராட்டங்கள் எதுவுமற்ற சூழலில், சிறிலங்கா அரசானது தனது முந்தைய பல்முனை அழிப்பு வேலைகளை தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
டப்ளினில் மகாநாட்டில் முன் மொழியப்பட்ட சிறிலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவுகளையும், பரிந்துரைகளையும், மற்றும் ஐ.நா. பொதுச் செயலரால் நியமிக்கப் பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பாராட்டுகிறோம்.
தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட, குறிப்பாக: தமிழ் இனவழிப்பு, போர்க் குற்றம், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு ‘சுதந்திரமான முறையில் அனைத்துலக விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்க இந்திய, மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், உள்ளிட்ட அதிகாரமுள்ளவர்கள் பொருத்தமான அனைத்துலக அமைப்புகளின் உதவியுடனும் மற்றும் வழிமுறைகளின் ஊடாகவும் ‘சுதந்திரமான முறையில் அனைத்துலக விசாரணை’யை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோருகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளினை சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா என்பது தான் இன்று எம்முன் எழுந்துள்ள கேள்வி?