இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த கோரிக்கையைத் தான் முன்வைத்திருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
இறுதி யுத்தம் அகோரமாக நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து, தலை, வயிறு, கால் என்பற்றில் குண்டுச் சிதறல்களுடன் வாழ்ந்து வருகின்ற சண்முகம் தேவி என்ற யவுதி இரும்புத் துண்டுகள் வலியை ஏற்படுத்தி, துன்பத்தைக் கொடுப்பதனால், வயிறாற சாப்பிட முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றார்.
முழங்காலில் சிக்கியுள்ள உலோகத்துண்டு தரும் வேதனை காரணமாக சிறிது தூரம் நடப்பது கூட கஷ்டமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
“தலையில் உள்ள குண்டுச் சிதறல் வெயில் என்றாலும் வலியைக் கொடுக்கும். குளிரென்றாலும் வலியைக் கொடுக்கும். சிறிது நேரம் மாத்திரமே படிக்க முடியும். தொடர்ச்சியாக இருந்து படிக்கவோ வாசிக்கவோ முடியாது. ஆசிரியர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க முடியாத அவல நிலை. ”
இவற்றக்கெல்லாம் காரணமான ஷெல் துண்டுகளை அப்புறப்படுத்துவதென்பது செலவுமிக்க வைத்திய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய சிகிச்சையை மேற்கொள்வதற்கு குடும்பத்தின் வறுமை நிலை இடம்கொடுப்பதில்லை என்றார் தேவி.சிலவேளைகளில் இந்த உலோகத் துண்டுகளை அகற்றுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அவர் கூறுகின்றார். இவரைப் போன்றவர்களின் துயர் துடைப்பதற்காக, விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவின் மூலம் இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.