Search

உலகின் 194வது நாடாக தமிழ் ஈழம் !- சர்வதேச தமிழர் மாநாட்டில் G.K மணி!

இங்கிலாந்து அனைத்துக் கட்சி தமிழ் நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் அமைப்பும் இணைந்து, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் சர்வதேச தமிழர் மாநாட்டை நடத்தி வருகின்றன. நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே. மணி கலந்து இம்மாநாட்டில் 07.11.2012 அன்று அவர் ஆற்றிய உரையின் விவரம்:

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்ட இனப் படுகொலையால் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்ட மனவலியும், அதிர்ச்சியும் இன்னும் விலகவில்லை. இந்தச் சூழலில் இம்மாநாடு நடைபெறுகிறது.

இலங்கையில் உரிமை கேட்டு போராடிய தமிழர்களுக்கு உரிமை தர வேண்டிய இலங்கை அரசு, இல்லாத காரணங்களைக் கூறி கடந்த 2006ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் மீது போர் தொடுத்தது.

சுமார் 3 ஆண்டுகள் தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் பறித்த தமிழர் விரோத ராஜபக்ச அரசு, 2009ம் ஆண்டு மே மாதத்தில் 5 லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை முல்லைத்தீவின் மூலையில் தள்ளி, முள்ளிவாய்க்காலில் நச்சு குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை அரங்கேற்றியது.

இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா. வல்லுனர் குழு, இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இனப்படுகொலையை ராஜபக்ச அரசு நடத்தியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றும், இது குறித்து பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் தருஸ்மன் தலைமையிலான ஐ.நா. குழு பரிந்துரைத்திருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடைபெற்ற இலங்கை இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தில் இலங்கைப் போரின் போது போர்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர சேனல்4 தொலைகாட்சி வெளியிட்ட ஆதாரங்களும் இலங்கையில் போர் குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றன. எனவே, இலங்கைப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடவேண்டும்.

இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது போர்குற்ற வழக்குத் தொடரப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

மேலும், இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழமுடியாது என்பது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக புரியும்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் சிங்களர்கள் பகுதிகளில் சிங்களக் கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். தமிழர்களுக்கு வாக்களிக்க சிங்களவர்களோ, சிங்களவர்களுக்கு வாக்களிக்க தமிழர்களோ தயாராக இல்லை.

இருதரப்பினரும் இணைந்து வாழ தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி 1976ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழ் கட்சிகள் போட்டியிட்ட போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களையும் தமிழ் கட்சிகள் கைப்பற்றின.

இதுமட்டுமில்லை. இலங்கை இனச்சிக்கலுக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு என்று கூறுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. எனவே, தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை உலக சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு தேசிய இனத்திற்கும் உண்டு. இந்த அடிப்படையில் இங்கிலாந்துடன் இணைந்துள்ள தேசிய இனமான ஸ்கொட்லாந்து மக்கள், தங்களது 312 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டு தனிநாடாக பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்கான பொது வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பே மான்டெநெக்ரோ, கிழக்கு தைமூர், தெற்குசூடான் என ஏராளமான நாடுகள் புதிதாக உருவெடுத்துள்ளன. இந்த வரிசையில் உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *