முப்பந்தைந்து ஆண்டுகளாக பொத்திப் பொத்தி
வளர்த்த எங்கள் புனிதப் படைகள் எல்லாம்
பேச்சடங்கி மூச்சடங்கி போன
துயரமிது….
கனவிலும் வராத கடும் அவலம்
எங்களைக் கடைசி வரை அழித்த விட்ட
சோகமிது….
இங்கொன்றும் அங்கொன்றுமாக
இரண்டு கரு நாகங்கள் காத்திருந்து
எங்களைக் கருவறுத்த
துரோகமிது….
இந்தியம் இழந்து விட்ட
ஒத்தை உசிருக்காக
பார்த்து வைத்து எங்களைப்
பழி தீர்த்த பாரதத்தின்
கேவலமிது…
…
எங்கள் புனித மண்ணில்
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத்
தொட்டிலையும் ஆட்டி
பெரிய நாடுகள் வேடிக்கை
பார்த்த வேதனையிது
வருகிறோம்..உதவுகிறோம்.. என
எங்களைக் காக்க வைத்தே
இவர்கள் கை விரித்த
கேவலமிது ……
ஏதுமறியா எங்கள் மாதவியரை
கூலி வாங்கும் இராணுவம்
கூடி நின்று கற்பழித்துக்
குத்தி நின்ற கொடூரம் இது….
பச்சிளங் குழந்தைகள் என்றும் பாராமல்
கொத்தணிக் குண்டுகள் போட்டுக்
கொன்றொழித்த கொடுமையிது…..
வெறும் கையோடு நின்ற
எங்கள் வீரப் புலிகளை
புற முதுகில் சுட்டுக் கொன்று
கோழைகள் நடாத்திய
கேவலமிது…..
ஏய்! எங்கள் எதிரிகளே!!
நாங்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உங்களை நித்திரையிலும் மறக்க மாட்டோம்……
ஏய் சர்வதேசமே!
காலச் சக்கரத்தில் ஈழத் தமிழருக்கும்
நல்ல கட்டம் ஒன்று காத்திருப்பதை
மறந்து விடாதே…..
அந்த ஒரு நாள் நிச்சயம் வரும் ….
அப்போது வருவாய் நீ,
எங்களை அழைத்து வந்து அழகு பார்க்க!
-வல்வை சாரதி