Search

தமிழினப் படுகொலையில் ஐ.நா. வகித்த பங்கை பெட்ரி அறிக்கை வெளிப்படுத்துகிறது: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழினத்தை அழிக்க சிங்கள இனவெறியன் இராசபக்ச நடத்திய போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார்ல்ஸ் பெட்ரி ஆணையம் அளித்த அறிக்கையின் கசிவு சுட்டுக்காட்டியுள்ளது.

 

தாக்குதலுக்கு உட்படுத்தாத பகுதிகள் (நோ ஃபயர் ஜோன்) என்ற அறிவித்து, அப்பகுதிக்குள் தமிழர்கள் வந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி அங்கு வந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமானத்தில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள படைகள் கொன்று குவித்தபோது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள், பொறுப்பின்றி செயல்ப்பட்டுள்ளார்கள் என்று சார்ல்ஸ் பெட்ரி அறிக்கை குற்றம் சாற்றியுள்ளது.

 

அதுமட்டுமின்றி, சிங்கள அரசப் படைகளின் திட்டமிட்ட தாக்குதலில்தான் அதிகப்படியான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் அரச படைகளும், புலிகளுமே என்று சம அளவில் குற்றம் சாற்றி ஐ.நா. அமைப்புகள் பேசி வந்ததையும் பெட்ரி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழர்கள் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வமான விவரங்களை பெற்றிருந்தும், அதை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டுவராமல் இரகசியமாக வைத்திருந்த ஐ.நா. அலுவலகங்கள் செயல்பாடு கண்டனத்திற்குரியது என்றும் பெட்ரி தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளார்.

 

சார்ல்ஸ் பெட்ரி ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளிக்கவுள்ள இந்த ஆய்வறிக்கை, தமிழின அழிப்புப் போருக்கு ஐ.நா. அமைப்பும் துணைபோயுள்ளதையே உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்ட ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 7,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிற விவரம் கொழும்புவில் நிலைகொண்டு செயல்பட்டு வந்த ஐ.நா.வின் தூதரகத்திடம் இருந்தது. அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை உலகின் ஊடகங்களுக்கு பான் கி மூன் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்றைக்கு சார்ல்ஸ் பெட்ரி தயாரித்துள்ள அறிக்கையில் கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் போர் நடக்கும்போதே மனித உரிமை அமைப்புகளாலும், ஐ.நா. மன்ற அலுவலகத்தில் இருந்து செயல்ப்பட்டுவரும் தி இன்னர் சிட்டி பிரஸ் என்கிற ஊடகத்தினாலும் கசியவிடப்பட்ட உண்மைகளே.

 

எனவே, இலங்கையில் தமிழினத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையோடும், இரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடனும் சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவரான மகிந்த ராஜபக்ச தொடுத்த போருக்கு ஐ.நா. அமைப்பும் கள்ளமெளனம் காத்து துணைபோயிருக்கிறது என்பதுதான் உண்மையாகும். சார்ல்ஸ் பெட்ரி அளித்துள்ள இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள் வெளியிடப்படாமல் மறைக்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால், தமிழின அழிப்புப் போரில் தான் வகித்த மெளனப் பங்கை ஐ.நா.பொதுச் செயலர் அலுவலகம் மறைக்க முற்படுகிறது என்றே கருத வேண்டும்.

 

சார்ல்ஸ் பெட்ரியின் இந்த அறிக்கை, தமிழீழ விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க, அவர்களோடு உறுதியாக நின்ற தமிழ் மக்களையும் சேர்த்தே அழிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட போர் என்கிற குற்றச்சாற்றையும் நிரூபிக்கிறது. இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க, தமிழினத்தையே அழிக்கும் ஒரு போருக்கு துணை நின்ற ஐ.நா.அமைப்பு, அந்த போரில் நடந்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ஒரு நியாயமான விசாரணையை நடத்துமா என்கிற ஐயமும் எழுகிறது.

 

போர் நடந்து முடிந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும், இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிட்டும் வாய்ப்பு இதுவரை உருவாகவில்லை. இதற்குப் பிறகாவது அது நடக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படுவதற்கும் எந்த சாத்தியப்பாடும் இல்லை. எனவே, தமிழினத்தின் அரசியல் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழர்களிடையே வாக்கெடுப்பை நடத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். இலங்கையில் தமிழினம் பாதுகாப்புடன், அரசியல் சம உரிமை பெற்று, சுதந்திரமாக வாழ வேண்டுமெனில் அவர்களுக்கென்று, அவர்களின் பாரம்பரிய பூமியில் தனிநாடு அமைத்திடுவது ஒன்றே ஒரே வழியாகும்.

 

நாம் தமிழர் கட்சிக்காக,

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

Leave a Reply

Your email address will not be published.