சிறிலங்காவில் 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்த நாட்களில் அதில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களைப் பாதுகாப்பதில் அனைத்துலக அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை தவறிழைத்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை அடுத்து சிறிலங்காவின் பிரதான தமிழ் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இது தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் தொடரப்படும் படுகொலைகள் மற்றும் பொதுமக்களைத் தடுத்து வைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்ற போதிலும் அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என எவரும் கூறமுடியாது. தற்போது ஐ.நா இக்குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளா எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் செயலரான பான் கீ மூனால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களை ஐ.நா பாதுகாக்கத் தவறியதை பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா தலைமையகம், பாதுகாப்புச் சபை மற்றும் சிறிலங்காவில் பணியாற்றிய ஐ.நா பணியாளர்கள் என அனைத்து மட்டத்திலுள்ளவர்கள் சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாக்கத் தவறியமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உள்ளக மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயுதம் தரிக்காத, போரில் பங்குபற்றாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது இவர்களை ஐ.நா பாதுகாக்கத் தவறியதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சிலேயே பெருமளவான உயிர்கள் பறிக்கப்பட்டன என்கின்ற உண்மையை ஐ.நா பகிரங்கப்படுத்தத் தவறியதாகவும் இவ் உள்ளக மீளாய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘”இந்த மீளாய்வின் மூலம் ஐ.நா சரியான பாடத்தை வரைவதில் நான் உறுதியாக இருக்கிறேன். உலக மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு குறிப்பாக மோதலில் சிக்குண்டு ஐ.நாவின் உதவியை எதிர்பார்த்துள்ள மக்களுக்கு இது அவசியமானது” என உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கையை வெளியிடும் போது ஐ.நா பொதுச் செயலர் பான்கீமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கப் படைகளால் 40,000ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பால் கூறப்பட்ட விடயத்தை இந்த அறிக்கையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதி வாரங்களில், இதற்குள் அகப்பட்டுக் கொண்ட 350,000 வரையான பொதுமக்களை புலிகள் அமைப்பு மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்ட அதேவேளையில், இந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளை நோக்கி சிறிலங்கா அரசாங்கப் படைகள் செறிவான, தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இடம்பெறும் மோதல்களில் பெரியளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான உறுதியான, பயனுள்ள நடவடிக்கையை ஐ.நா எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
“அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் யுத்தம் தீவிரமடைந்திருந்த போது ‘உங்களை நாங்கள் பாதுகாக்க முடியாது’ என ஐ.நா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்த போது, இதனை ஏற்காது யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐ.நா தொடர்ந்தும் செயற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செயற்பட்டிருந்தால் ஐ.நா அமைப்பானது சிறிலங்கா அரசாங்கம் மீது அதிக அழுத்தங்களை மேற்கொண்டிருக்க முடியும்” என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான ஆய்வாளர் மீனாக்சி கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொய்யான தகவல்கள் காணப்படுகின்றன. உண்மை என்ன என்பதை விட வதந்தியைப் பரப்புவதில் சிலர் ஈடுபடுகின்றனர்” என சிறிலங்காவில் இடம்பெறும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகளில் சிறிலங்கா அதிபரின் ஆலோசகராகச் செயற்படும் ரஜீவ விஜயசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவால் இடம்பெற்றதாக அனைத்துலக நாடுகளால் விமர்சிக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இந்நாட்டு இராணுவமே அதிகம் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் ரஜீவ விஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா போன்ற உலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்ட உந்துதலாக காணப்படுவதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
போரில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களை சிறிலங்கா கடற்படையினர் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாத்தமை உள்ளடங்கலாக சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இவற்றை வெளியுலகும் கவனத்திலெடுக்கவில்லை எனவும் சிறிலங்கா அதிபரின் மீளிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கான ஆலோசகர் ரஜீவ விஜயசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி வழிமூலம் : Los Angeles Times – By Mark Magnier