வல்லைச் சந்தியில் இராணுவத்தினர் படைமுகாம் ஒன்றை புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த இரு தினங்களாக கனரக வாகனங்கள் மூலம் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாகவும் இது ஒரு படைத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியே என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வல்லைப்பகுதியில் ஏற்கனவே ஒரு படைமுகாம் நிறுவப்பட்டிருந்தது. வடமராட்சிக்கு செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் இந்த முகாமில் அனேக நேரங்களில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு உட்செல்ல முடிந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் வல்லை முகாமில் இரவு நேரங்களில் பயணிக்கும் சகலரும் படையினரிடம் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே பயணிக்கும் நிலை தொடர்கின்றது. இந்த நிலையில் ஏற்கனவே இருந்த முகாமுக்கு எதிர்ப்பக்கமாக புதிய முகாம் ஒன்றை துரித கதியில் இராணுவத்தினர் கடந்த சில தினங்களாக அமைத்து வருகின்றனர்.
இதேவேளை தீவுப்பகுதியிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். நகரப்பகுதியில் நிலை கொண்டிருந்த பெருமளவ இராணுவத்தை மீளப்பெற்றுவிட்டோம் என இராணுவ தலைமையகம் கூறுகின்ற போதிலும் அப்படையினர் தீவுப்பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.