Search

நிஜம் – எண்ணற்ற வினாக்களை எழுப்பும் மதிப்புமிக்க நூல்! – செந்தமிழன் சீமான்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழத்தின் நம் சொந்தங் கள் நடத்திய நியாயமான, தீரமிக்க விடுதலைப் போராட்டத்தையும் பெரிதும் பாதித்த ஒரு நிகழ்வாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி, அதை இந்திய மண்ணில் நிறைவேற்றியது என்று இராஜீவ் கொலையை புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுக் கழகம் கூறியது, அதனை நீதிமன்றங்கள் ஏற்று தீர்ப்பும் அளித்தன. அதன் விளைவே நமது தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி கடந்த 21 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இராஜீவ் காந்தியை உண்மையில் சதித்திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார்? ஏன் கொன்றார்கள்? அதனால் அவர்கள் அடைந்த இலாபம் என்ன? என்கிற கோணத்தில் சிந்தித்தவர்களுக்கெல்லாம் எட்டாத பல உண்மைகளை தான் பெற்ற நேர்முகமான அனுபவங் களின் வாயிலாக, அன்றிருலிருந்து இன்று வரை தமி ழக மக்களிடம் துணிச்சலாக எடுத்துக் கூறி வருபவர் அண்ணன் திருச்சி வேலுசாமி அவர்கள். இராஜீவ் காந்தியின் கொலை பற்றியும், அதன் பின்னுள்ள அரசி யலைப் பற்றியும், சதியைப் பற்றியும் பேசுவதற்கே பலரும் அஞ்சிய காலகட்டத்தில், இராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டினார் வேலுசாமி அவர்கள்.

இராஜீவ் கொலையின் முக்கிய சூத்திரதாரிகளான சந்திராசாமி, அரசியல் தரகர் சுப்ரமணியம் சாமி ஆகியோரின் பங்கு பற்றி இந்தியாவின் பல நாளிதழ்களும் ஊடகங்களும் அவ்வப்போது எழுதினாலும் அண்ணன் வேலுசாமி மட்டுமே அதனை தொடர்ச்சியாக, உண்மையின் குரலாய் மக்களிடம் பேசிவந்தார். ஜனதா கட்சியின் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும், இந்திய அரசியலில் சக்திமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்த சுப்ரமணியசாமியுடன் நெருங்கிப் பழகி, அவருடைய நம்பிக்கையை பெற்றவராக இருந்தும், இராஜீவ் கொலையில் சாமிக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் முளைவிட்ட நாள் முதல், அவருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அண்ணன் வேலுசாமி விலைபேசியிருப்பாரேயானால் இன்றைக்கு வியத்தகு நிலையில் மிகுந்த அதிகாரமிக்க மத்திய அமைச்சராகவே உலா வந்திருப்பார். ஆனால், தனது வாழ்விற்கே அச்சுறுத்தலாகும் அளவிற்கு ஆபத்து நிறைந்த அந்த கொலைச் சதியைப் பற்றி, தான் அறிந்த உண்மைகள் அனைத்தையும் மக்கள் மத்தியில் சொல்வது என்று முடிவெடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரமாகச் சென்று விரிவாக பேசியது மட்டுமின்றி, ஜெயின் ஆணையத்தின் முன் வாக்குமூலம் தாக்கல் செய்து உண்மையை உலகிற்குப் பறைசாற்றினார்.

ஜெயின் ஆணையத்தில் வேலுசாமி அவர்களின் வாக்குமூலமும் சுப்ரமணிய சுவாமியை அவர் குறுக்கு விசாரணை செய்தததும் அவருடைய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல், வியர்வை மழையில் சுப்ரமணியசாமி நனைந்து நின்றதும், இராஜீவ் கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் யாரென்பதை உலகம் உணர உதவியது. சுப்ரமணிய சாமிக்காக பேரம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இராஜீவை கொல்ல சதித்திட்டம் தீட்டியது ஜெயின் ஆணைய விசார ணையில் வெளிப்பட்ட பின்னரும் அவர்களை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனின் உண்மை முகத்தை அன்றைக்கே கிழித்தெறிந்தவர் அண்ணன் வேலுசாமி அவர்கள்.

‘ராஜீவ் படுகொலை : தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. இந்தியாவைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில், அதன் முன்னாள் பிரதமரை, இந்த நாட்டிற்குள் இருந்தே சதி செய்து கொன்றுவிட்டு, இன்று வரை இந்திய அரசியலில் கம்பீரமாக வலம் வர முடியும் என்றால், இந்த நாட்டின் அரசியலும் அதிகாரமும் யாரால் இயக்கப்படுகிறது? சுப்ரமணியசாமியை அண்ணன் வேலுசாமி குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் வியர்வை மழையில் நனைந்த காட்சியை நேரில் பார்த்த இராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முகம் சிவந்தார் என்று எழுதியுள்ளார்.

ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சுப்ரமணியசாமி மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை, இராஜீவ் கொலையில் அந்நிய சதி குறித்து ஆராய அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை அமைப்பு ஏன் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை? தமிழீழத்தின் மீது சிங்கள இனவெறியன் இராஜபக்ச தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு எல்லாவிதத்திலும் உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமாகயிருந்த, இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைத் தனது காலடியில் வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும்தான் என்று தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்களின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படி எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது அண்ணன் வேலுசாமி அவர்களின் இந்த மதிப்புமிக்க நூல். இப்படிப்பட்ட ஒரு நூலை வழங்கியதற்காக அண்ணன் வேலுசாமிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். எப்போதும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்தப்புத்தகத்தை தவறாது வாங்கிப்படிக்க வேண்டுகிறேன்.

– செந்தமிழன் சீமான்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *