யுத்த காலத்தில் பறப்பதைப்போல கிபிர் குண்டு வீச்சு விமானங்கள், பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை வட்டமிட்டு தாழப் பறந்தையடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பாடசாலை மாணவர்கள் பாதுகாப்புத் தேடி மேசைகளின் கீழ் ஒளித்தனர். கிபிர் விமானங்கள் போர்க் காலத்தில் வன்னியில் பறப்பதைப்போல நேற்று முல்லைத்தீவில் பல பிரதேசங்களிலும் தாழப்பறந்தன. அத்துடன் அவை தாக்குதல் நடத்துவது போல வட்டமிட்டு குத்துச் சாய்வாகக் கீழிறங்கி மீண்டும் மேலெழும்பின.போர் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னர் இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் தடவையாக “கிபிர்’ விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பில் வட்டமிட்டன. அதன் பின்னர் கடந்த 13 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்றும் “கிபிர்’ விமானங்கள், முல்லைத்தீவில் தாழப் பறந்து மக்களை அச்சுறுத்தின.இதன் பின்னர் நேற்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த “கிபிர்’ விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன. புதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு, ஆனந்தபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவை பேரிரைச்சலுடன் வட்டமடித்தன.மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த நேரத்திலேயே கிபிர் விமானங்கள் வட்டமடித்தமையால் மாணவர்கள் வீதிகளில் சைக்கிள்களைப் போட்டுவிட்டு மரங்களின் கீழ் ஒளித்துக்கொண்டனர். மக்களும் பதற்றத்தில் தமது விடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர்.