ஆயுதங்கள் வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்தால், அதற்கு கணிசமான பணப்பரிசு வழங்கப்படும் என்று சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ளதால், கிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களைத் தேடும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட முற்பட்டுள்ளனர்.
கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தினால், வெளியிடப்பட்டுள்ள துண்டுபிரசுரம் ஒன்றில், ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் அவற்றை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் வெடிபொருட்களை வைத்திருப்போர் அவற்றை சிறிலங்கா படையினரிடம் ஒப்படைத்தால், அவற்றின் சேதக்கணிப்புக்கு அமைய பணப்பரிசு வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீடு வீடாக சிறிலங்காப் படையினர் விநியோகித்து வரும் இந்தத் துண்டுபிரசுரத்தில், ஆயுதங்களுக்கு வழங்கப்படும் பணப்பரிசு பற்றிய விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்கொலைஅங்கி மற்றும் கனரக அல்லது இலகு இயந்திரத் துப்பாக்கிக்கு 15 ஆயிரம் ரூபா வரையும், ஆர்பிஜி உந்துகணை செலுத்தி மற்றும் ரி-56 ரகத் துப்பாக்கிக்கு 10 ஆயிரம் ரூபா வரையும், கைத்துப்பாக்கி, கிளைமோர், கவசஎதிர்ப்புக் கண்ணிவெடி போன்றவற்றுக்கு 5 ஆயிரம் ரூபாவும், கைக்குண்டுக்கு 2 ஆயிரம் ரூபாவும், இதில் உள்ளடக்கப்படாத ஆயுதங்களுக்கு அவற்றின் சேதக்கணிப்பின் அடிப்படையிலும் பணப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ள இந்தப் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வறிய குடும்பங்கள் ஆயுதங்கள் வெடிபொருட்களை தேடத் தொடங்கியுள்ளன.
போரின் போது கைவிடப்பட்ட பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்கள் அகற்றப்படாமல் கிடக்கும் நிலையில், அவற்றை சிறிலங்கா படையினரிடம் கையளித்து பணப்பரிசைப் பெறுவதற்கான ஆபத்தான முயற்சியில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர்.
சிறிலங்காப் படையினர் பொதுமக்களை பண ஆசை காட்டி ஆபத்துக்குள் தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.