மாவீரர் தினத்தைப் பற்றி நான் அதிகம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் கே. இ. எரிக் பெரேரா, தமிழ் மக்கள் தமது வழக்கமான கார்த்திகைத் திருநாளைத் தங்குதடையின்றி கொண்டாடலாம் எனவும்தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மாவீரர் நாளன்று பூஜை வழிபாடுகளுக்கு படையினர் அனுமதி மறுப்பது குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்கள் தமது விளக்கீட்டை முழுமையான சுதந்திரத்துடன் கொண்டாட முடியும். அதற்குப் பொலிஸார் உரிய பாதுகாப்பினை வழங்குவர். என மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் மாவீரர் குடும்பங்களுடைய வீடுகளுக்குச் சென்ற படையினரும், பொலிஸாரும் மக்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் இந்த கருத்து வெளியாகியிருக்கின்றது.
இது தொடர்பில் தங்களுக்கு எதுவிதமான அறிவித்தல்களும் வரைவில்லை என்று நவம்பர் 27 ஆம் திகதி மக்கள் சுதந்திரமாக ஆலயங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் என்று அவர் குறிப்பட்டிருந்தார்.
அத்துடன் நேற்று முன்தினம் வேலணைப் பகுதியில் கடத்தப்பட்டு காணமல்போனதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் நீண்ட காலமாக தேடி வந்ததாகவும் பொலிஸாருக்கு தண்ணிகாட்டிவிட்டு இவர் தலைமறைவாக இருந்துள்ளதுடன் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து செல்வதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த நபருக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஊர்காவல்துறைப் பொலிஸ் நிலைத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் இவரை நீண்ட காலமாக பொலிஸார் தேடிவந்ததாவும் தெரிவித்தார்.