திருகோணமலை மாவட்டத்தல் தமிழ் கிராமங்கள் தோறும் மாவீரர் தின அனுஸ்டானங்களை முன்னெடுக்க வேண்டாமென கோரும் அறிவிப்புக்களை இன்று முழுவதும் கடற்படையினர் ஒலிபரப்பு செய்துவருகின்றனர்.
வாகனங்கள் மூலமும் அதே போன்று ஆலயங்களது ஒலிபெருக்கிகள் மூலமும் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுவருவதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அறிவிப்புக்களை ஒலிபரப்ப மறுத்த ஆலயமொன்றினது மதகுருவொருவர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவரிடம் பொதுமக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.
ஏற்கனவே கடந்த 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை பொது நிகழ்வுகள் எதனையும் நடத்தக்கூடாதெனவும் ஆட்கள் ஒன்று கூடக்கூடாதெனவும் படைத்தரப்பு வலியுறுத்திவருகின்றது. அதை மீறி செயற்படுவோர் மீது கடும் நடடிவக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனை கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
எனினும் இத்தகைய கெடுபிடிகளை தாண்டியும் வட-கிழக்கில் மாவீரர்களை நினைவு கூரும் சுவரொட்டிகள் பலதும் ஒட்டப்படடிருந்தன. குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம் கோண்டாவில் உரும்பிராய் வல்வெட்டித்துறையென பல பகுதிகளினிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. படையினர் ஒருபுறம் ஒட்டிய சுவரொட்டிகளை அகற்றி செல்ல மறுபுறத்தே மீண்டும் மீண்டும் அவை முளைத்து வருவதே வேடிக்கையாகும்.