‘யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின தீபம்’

இலங்கையில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் சிலர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை அங்கு அனுட்டித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் படையினர் சென்று தேடுதல் நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகிய செவ்வாய்கிழமையன்று அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயுனும் பல்கலைக் கழக மாணவர்கள் போரின் இறந்தவர்கள் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டதாக கூறியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சென்ற படையினர், மாணவர்களின் அறைகளை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதாகவும், மாணவிகளின் விடுதிக்குள் சென்ற அவர்கள், அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளையும், அறைக் கதவுகளையும் அடித்து நொறுக்கியதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்றப்பட்ட தீபம்யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்றப்பட்ட தீபம்

பதில் துணைவேந்தர் வேல்நம்பி அவர்களும், சிரேஸ்ட மாணவ ஆலோசகரும் வந்து படையினருடன் பேசியபின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் தர்ஷானந்த் தெரிவித்தார். அதனையடுத்து, மாணவர்கள் விளக்குகளை ஏற்றியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ் நகரப்பகுதியிலும் சில இடங்களில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சில இடங்களில் ஏற்றப்பட்டிருந்த விளக்குகள் அடித்து நொருக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் சிலர் போரில் உயிரிழந்த தமது உறவினர்களின் படங்களை வீட்டில் வைத்து அவர்களை நினைவுகூர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் தின உரையினை அவருடைய புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த பிராந்திய பத்திரிகையொன்றின் செய்தி தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பத்திரிகையை விற்பனை செய்த முகவர்கள் சிலரும் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அந்தப் பத்திரிகையின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஷ் கூறுகின்றார்.

விளக்கேற்றி அஞ்சலி 

Leave a Reply

Your email address will not be published.