யாழ்.குடாநாட்டில் 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக கூட்டம் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நல்லூர் பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களும், ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் யாழ்.குடாநாட்டில் படையினர் கோரியிருந்த 179 இடங்களை படையினருக்கு வழங்க சம்மதம் தெரிவித்து சிறிலங்கா அரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வேலணையில் 13 இடங்களையும் வடமராட்சி கிழக்கில் 26 இடங்களையும் தெல்லிப்பழையில் 26 இடங்களையும் நல்லூரில் 16 இடங்களையும் கோப்பாயில் 11 இடங்களையும் கோரியுள்ளனர். கரவெட்டியில் 3இடங்களையும் பருத்தித்துறையில் 2இடங்களையும் சண்டிலிப்பாயில் 2இடங்களையும் நெடுந்தீவில் 7இடங்களையும் சங்கானையில் 6இடங்களையும் யாழ்ப்பாணத்தில் 13இடங்களையும் சாவகச்சேரியில் 40 இடங்களையும் ஊர்காவற்றுறையில் 9 இடங்களையும் இராணுவத்தினர் தமக்கு தருமாறு கோரியுள்ளனர்.