கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பது மற்றும் பல்கலைக்கழகத்தை இயல்பு நிலைக்குத் திருப்புவது தொடர்பில் இன்று காலை காங்கேசன்துறையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், பல்கலைக்கழக சுற்றாடலில் போடப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் கொடுத்த வாக்குறுதி தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் மாணவர்களுடைய கைது குறித்து தமக்கு எதுவும் தெரியாதெனவும், அனைத்து விடயங்களும் உயர்மட்டத்தினரின் பணிப்பின் பெயரிலேயே இடம்பெற்றதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேபோல் மாணவர்கள் சில தினங்களில் விடுவிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் இன்று மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் கைது போன்றவற்றை கண்டித்து, மருத்துவ பீட மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்குறித்த பேச்சுவார்த்தையினை முன்னிறுத்தி பிற்போடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் மருத்துவ பீட மாணவர்களை மட்டும் விடுவிப்பதா, இல்லையா என பொலிஸார் பல்கலைக்கழக சமுகத்துடன், பேரம்பேசியிருப்பதாகவும் அறிய முடிகின்றது.