இதுவரை காலமும் அவுஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் சென்றுவந்தனர். இதனால் இந் நாடுகள் பாரிய பொருட்செலவில் தமது கடற்பிராந்தியத்தை பாதுகாத்து வருகிறது. இந் நிலையில் மீன் பிடி இழுவைக் கப்பல் ஒன்றை நேற்றைய தினம் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் மற்றும் பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். கம்பிரியா கவுன்சிலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் பொலிசார் நடத்திய பாரிய தேடுதலில், இக் கப்பலில் இருந்து 17 பேரை அவர்கள் கைதுசெய்துள்ளார்கள். அண்ணன் என்ன்று அழைக்கப்படும் இந்த மீன் பிடிக் கப்பல், பிரித்தானிய துறைமுகத்தை வந்தடைந்த மறு நிமிடமே, பொலிசார் சோதனைகளை நடத்தியிருந்தனர். இதில் கைதானவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர் என்றும், வேறுசிலர் பிலிப்பைன்ஸ் மற்றும், இந்தோனேசியர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதனூடாக நன்கு திட்டமிட்ட ஆட்கடத்தல் வேலையில், சிலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியாவுக்கு அகதிகளைக் கொண்டுவர புதிய பாதை ஒன்றை ஆட்கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடித்துள்ளதா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.