கடும் குளிரையும் பொருட்படுத்தாது பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினை தடுப்பதற்கு தவறிய ஐ. நா சபையினை கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல்களை கண்டித்தும் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்ட நிகழ்வில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்ப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பித்த போது சிறுவர் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு நூற்றுக் கணக்கான சுலோக அட்டைகளை தாங்கியும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான கொள்கை வகுப்பாளர்களும் அதிகாரிகளும் தமது வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவதானித்த வண்ணம் சென்றனர்.
இதேவளை, மாலை 5 மணிக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் தென் ஆசிய மற்றும் இலங்கைக்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை அவர்களது அலுவலகத்தில் சென்று சந்தித்து ஈழ தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் தயாரிக்கப்பட்ட மனுவினை கையளித்து இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கி பிரித்தானிய அரசு செயற்படாமல் இருப்பதனை வன்மையாக கண்டித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மாலை 6 மணி அளவில் இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக நிறைவேறிய வேளை தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக செயற்படுவோம் என்று மக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.