அகிலன் கருணாகரன்!
எட்டு வயதிலேயே ஐரோப்பிய சாம்பியன்!!
உங்களால் நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும்!
ஆம்……
வல்வைக்குப் பெருமை சேர்த்த இந்தக் குட்டிப் புலி அகிலனை வாழ்த்தலாம் வாருங்கள்!
வல்வையை பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.திருமதி.கருணாகரன் கவிதா தம்பதியினரின் புதல்வன் அகிலன் இந்தச் சாதனை மூலம் நம் வல்வைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
பெல்ஜியத்தில் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ரீதியில் நடைபெற்ற, எட்டு வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கராத்தே போட்டியில், 22 நாடுகளில் இருந்து வந்த 38 போட்டியாளர்களை வென்று முதல் இடத்தைப் பிடித்து இந்தச் சாதனையைச் சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கும் இந்தக் குட்டிப் பையனை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.
இது மட்டுமில்லாமல் அகிலன், இந்த வருடத்தில் லண்டனில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில் (குழு காட்டா மற்றும் குழு குமித்தே உட்பட ) தங்கம்,வெள்ளி,வெண்கலம் என 38 வெற்றிக் கிண்ணங்களையும் வென்று குவித்திருக்கின்றார்.
அத்தோடு வருடா வருடம் லண்டனில் ஆசான் சென்ஷி கணேசலிங்கம் அவர்கள் நடாத்துகின்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த மாணவனுக்கான “விஜயராஜா அவார்ட்”டையும் (சக்தி நிறுவனம் சார்பானது )வென்றிருக்கின்றார்.
தனது ஆறு வயதில் இருந்தே இந்தக் கராத்தே கலையை, ஆசான் திரு. கணேசலிங்கத்திடம் பயின்று வரும் செல்வன் அகிலன்
வேறு யாருமல்ல. கடந்த வருடம் போலந்து நாட்டில் நடந்த குழந்தைகளுக்கான (14 வயதுக்குட்பட்ட) உலக சாம்பியன் கராத்தே போட்டியில் முதல் இடத்தை பெற்று தங்கம் வென்ற ஆர்த்தியின் தம்பி தான் இவர்.
தன்னைப் போலவே தனது தம்பியையும் ஐரோப்பிய அளவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வெல்ல வைத்த ஆர்த்தியின் ஆசை என்னவென்று தெரியுமா?
வரப்போகும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என நம்பிக்கையுடன் கூறுகின்றார்.
கராத்தேயில் தன்னை மேலும் வளர்த்த ஆர்த்தி தற்போது கராத்தே போட்டிகளின் நடுவராக பணியாற்றும் தகுதியும் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி UWK International Referee & Judge Course ல் சித்தி பெற்ற சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
இவர்கள் இருவரும் திரு. கதிர்காமலிங்கம் (வல்வையின் முன்னாள் உதைபந்தாட்ட வீரர்) திருமதி யோகேஸ்வரி மற்றும் திரு.செந்திவேல் தேசிகர் திருமதி நாதநாயகி ஆகியோரின் பேரப்பிள்ளைகள் ஆவார்கள்.
வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்……
நன்றி,
கே.பி (லண்டன் )