இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளில் சிலர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகவீனமுற்ற மேற்படி தமிழ் யுவதிகளில் 7பேர் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்த போதிலும், சுமார் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
‘இராணுவ மகளிர் பிரிவின் 6ஆவது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ஆம் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த தமிழ் யுவதிகளில் 16 பேர் நேற்றிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த ‘நவம் அறிவுக் கூடம்’ அமைந்திருந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த யுவதிகளே, நேற்று நள்ளிரவு அங்கு கேட்ட பயங்கரமான சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
நவம் அறிவுக் கூடம் கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் நகரின் மேற்கே கிருஸ்ணபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6ஆவது படையணியின் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 16 யுவதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிலர் மயக்கமாகிய நிலையில் இருந்துள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆய்வுகூடத்தின் முன்னால் இலத்திரனியில் சாதனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதிக்கு பிரத்தியேக பாதை இருப்பதனால் பொது மக்களின் நடமாட்டம் இப்பகுதியில் தடுக்கப்பட்டு இராணுவத்தினர் மட்டுமே கண்காணித்து வருகின்றனர். இராணுவ வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மட்டுமே இவர்களை பராமரித்து வருகின்றனர்.
இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குள் அங்கு இராணுவத்தினர் பெருமளவில் கூடியுள்ளனர். வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இன்னும் மயங்கிய நிலையிலேயே இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார் என்று தகவல் ஏதும் தெரியாத நிலையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்களின் குடும்பத்தவர்களில் பலர் வைத்தியசாலை சூழலில் கூடி வருகின்றனர். இருப்பினும், இதுவரை குடும்பத்தவர்கள் யாரும் அவர்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இன்று முற்பகல் 11.15 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக சுமார் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்தும், அவர் அவர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியரால் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
இராணுவத்தினரின் கட்டளைக்கமைய பாதிக்கப்பட்டுள்ள பெண்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என மாவட்ட வைத்திய அத்தியட்சகரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்ததாக ஸ்ரீதரன் எம்.பி கூறினார்.
வைத்தியசாலை சூழலில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், இங்கு பதற்றம் நிலவுகின்ற நிலையில், இராணுவத்தினர் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.