யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை குறித்த இரு முன்னாள் போராளிகளும் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு முன்னால் உரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் பிடிக்குள் அகப்பட்டு அரசின் புனர்வாழ்வு பெற்று 6 மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டனர் என்றும், இருவரும் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த சண்முகம் நகுலன் (வயது – 26), கோவிந்தன் சுதர்ஷன் (வயது – 28) ஆகிய இருவருமே கறுத்த நிற வானில் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் கோவிந்தன் சுதர்ஷன் அண்மையில் திருமணமானவர் எனவும், இவர் கடந்த வாரம் இராணுவப் புலனாய்வாளர்களினால் வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு நாட்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.