
பெயர்ப்பட்டியலோடு சுற்றித்திரியும் இராணுவப் புலனாய்வாளர்கள், சில பொதுமக்களிடம் அப்பெயர்ப்பட்டியலைக் காட்டி குறித்த பெயருடையவர்கள் தொடர்பாக கேட்பதாகவும், அவர்கள் குறித்து தெரியாது என கூறுபவர்களை கோவமாக பார்த்து கண்டித்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பொலிகண்டிப்பகுதியில் மூவரைக் கைது செய்த்ததாகவும், கரவெட்டிப் பகுதியில் இருவரை நேற்றுக் கைது செய்ததாகவும் வடமராட்சிப் பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு திடீர்திடீரென நிகழும் கைது நடவடிக்கைகளால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை காணப்படுவதோடு, இன்னும் சிலர் தலைமறைவாக உறவினர் தெரிந்தவர்கள் வீடுகளில் வசிப்பதாகவும் தெரியவருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் ஒரு மாணவனைக் கைது செய்தவேளை, குறித்த மாணவனின் தந்தை, நாளை மறுதினம் தன் மகனுக்கு க.பொ.த,சா.தரப் பரீட்சை இருக்கின்றது அவனைக் கைது செய்யாதீர்கள், அவனுக்குப் பதில் என்னைக் கைதுசெய்யுங்கள் என இராணுவ புலனாய்வாளர்களிடம் கெஞ்சிய போதிலும் இரு நாட்களின் பின்னர் அவனை விடுதலை செய்வோம் என தெரிவித்துக் கைது செய்தனர்.
இரு நாட்களின் பின்னர் இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தவேளை, நாங்கள் கைது செய்ய வந்தபோது, நீங்கள் குழறி ஆர்ப்பாட்டம் செய்ததனால் நாம் உங்கள் மகனை மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்தனராம் எனவும் தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கைது நடவடிக்கைகளால் மிகவும் பாரிய அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறியமுடிகின்றது.