Search

அடக்கப்படுகின்ற எந்தவொரு இனமும் எழுச்சியடையும் என்பதை புலம்பெயர்ந்த மக்கள் சிறீலங்காவிற்கு உணரவைக்கவேண்டும் – தாயகத்தில் இருந்து வீரமணி.

வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் மீண்டும் நள்ளிரவில் நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன. சிறீலங்காவின் இனவாதப் பிசாசுகள் மீண்டும் உலாவத் தொடங்கியுள்ளமையை இந்த நாய்களின் சத்தம் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. சிறிது காலம் படுத்து ஓய்வெடுத்த நாய்களுக்கு இப்போது வேலை கிடைத்துவிட்டது. இந்த நாய்களின் சத்தம் ஊளைச் சத்தமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், தற்போது உலாவித்திரியும் சிறீலங்காவின் பிசாசுகள் தமிழ் மக்களின் உயிரை எடுக்கின்ற நேரங்களில் இந்த நாய்கள் ஊளையிடும். இது தமிழ் மக்களின் நம்பிக்கை. இதனால் தான் நாய்கள் ஊளையிடும் நேரங்களில் தமிழர் பகுதிகளிலுள்ள சிறுவர்கள், சிறுமியர் கத்திக் குளறுவார்கள்.

ஆயினும், இந்த நாய்களின் குரைப்பு தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏனெனில், கடந்த 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் நாய்களின் குரைப்பைக் கேட்டு வருகின்றார்கள். ஏன் தமிழீழ விடுதலைப் போராட்டம் இத்தனை பெரிய போராட்டமாக கட்டியெழுப்பப்பட்டமைக்கு தமிழீழத்திலிருந்த நாய்களுக்கே முக்கிய பங்குண்டு. அந்த நாய்களுக்கு நாங்கள் வீர விருதுகளை வழங்க வேண்டும். ஏனெனில், இந்திய இராணுவ காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் நாய்களின் குரைப்பிற்கு குறையிருக்காது. வீடுகளில் மறைந்திருக்கின்ற போராளிகள் நாய்களின் குரைப்பைக் கேட்டவுடன் உசாராகி, நிலையெடுத்து அவர்களின் கண்களில் படாமல் தப்பிச் செல்வார்கள்.

ஏன், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உட்பட புலிகளின் மூத்த தளபதிகளை இந்திய இராணுவ வேட்டையிலிருந்து பாதுகாத்ததில் தமிழீழத்திலிருந்த நாய்களுக்கு முக்கிய பங்குண்டு. அன்றைய பொழுதுகளில் நாய்கள் குரைத்திருக்காவிட்டால் எமது தலைவரையும் தளபதிகளையும் இந்திய இராணுவம் வேட்டையாடியிருக்கும். எமது விடுதலைப் போராட்டம் வளர்ந்திருக்காது. அன்று நாய்கள் குரைத்தது எமக்குப் பெரும் நன்மையாக அமைந்ததைப் போல இன்றும் நாய்கள் குரைக்கின்றமை எமக்கு எதிர்காலத்தில் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கொண்டேயிருக்கின்றனர்.

தமிழீழத்தில் தற்போது நாய்கள் குரைக்கின்றன. சிறீலங்கா இராணுவம் மீண்டும் புலி வேட்டையில் இறங்கி யிருக்கின்றமையாலேயே இங்கு நாய்கள் குரைக்கின்றன. உலகிலேயே மிக மோசமான அராஜகங்களை அரங்கேற்றி வருகின்ற இராணுவங்களைப் பட்டியல்படுத்தினால் நிச்சயமாக அதில் சிறீலங்கா இராணுவம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதைப் போல சிறீலங்கா அரசாங்கம் ஈழத் தமிழ் மக்கள் மீது மீண்டும் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதாகக் கூறி விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நள்ளிரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் பயங்கரவாதக் காவல்துறையினர் என்ற போர்வையில்  வீடுகளுக் குள் நுழைகின்ற சிறீலங்கா இராணுவத்தினர் முன்னாள் போராளிகளைக் கைது செய்து வருகின்றனர். வன்னியில் இன அழிப்பு யுத்தத்தை முன்னெடுத்த சிங்கள இராணுவம், போர் மரபுகளை மீறி உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைக் கொண்டு வந்து வன்னியில் கொட்டியது. உலக நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்த இரசாயன ஆயுதங்களை சிங்கள இராணுவத்தின் உதவியுடன் வன்னியில் பரீட்சித்துப் பார்த்ததாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இறுதி யுத்தத்தின் போது சர்வதேச மத்தியஸ்தத்துடன் சரணடைய என்று பணிக்கப்பட்ட போராளிகளைக் கொன்று குவித்த சிறீலங்கா அரசாங்கமும் இராணுவமும் எஞ்சியவர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. யாருக்குமே தெரியாத இரகசிய முகாம்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் இந்தப் போராளிகளை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்கின்ற அரசாங்கம், அவர்களில் 2000 ஆயிரம் பேர் வரையானோரை விடுதலை செய்துள்ளது.

அவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்க்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் அவர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்து வருகின்றது. யாழ் குடாநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம் பித்த இக்கைது நடவடிக்கைள் இப்பத்தி எழுதும் வரை தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஏற்கனவே இவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களையும் கொண்டு நள்ளிரவு வேளை அவர்களின் வீடுகளுக்கு வருகின்ற சிங்கள இராணுவத்தினர் குடும்பத்தார் கதறக் கதற அவர்களைக் கைது செய்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் கொண்டு செல்கின்றனர்.

ஒப்புக்காக காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உடனடியாகவே வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எதற்காகத் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டார்கள்? எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்? என்று எதுவுமே தெரியாத நிலையில் மறுநாள் காவல்துறை நிலையங்களுக்குச் சென்ற உறவினர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சில காவல்துறை நிலையங்களில் தமக்கு எதுவுமே தெரியாதென்று காவல்துறையினர் கைவிரித்தனர். சில காவல்துறை நிலையங்களில் உங்கள் பிள்ளைகள் வவுனியா தடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புனர்வாழ்வு வழங்கப்பட்ட இவர்களை எதற்காகக் கைது செய்ய வேண்டும்? இவர்கள் கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்ற சாரப்படக் குடாநாட்டிலுள்ள ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இதனால் சிறீலங்கா புலனாய்வுத் துறையும் இராணுவமும் திக்குமுக்காடின. இந்த நிலையிலேயே சிறீலங்காவின் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது புனர்வாழ்வு பெற்ற பின்னர் பொதுவாழ்வில் இணைந்த நிலையில் கைதானவர்களுக்கு தற்போதும் புலிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் அவர் ஒரு உண்மையையும் மறைமுகமாகக் கூறியிருக்கிறார். என்னெவெனில், இலங்கையில் தற்போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளை யாரும் அழிக்க முடியாது என்பதையும் அவர்கள் தற்போதும் சிறீலங்காவின் ஆட்சியில் பங்கெடுக்கிறார்கள் என்பதை அவர் ஒட்டுமொத்த சிறீலங்கா மக்களுக்கும் எடுத்தியம்பியிருக்கிறார்.

புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை ஐம்பது பேர் வரையானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏனையவர்களைத் தேடி வலை விரிக்கப்பட்டுள்ளது. இப்பத்தியை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நண்பர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி, அச்சுவேலியில் 15 முன்னாள் போராளிகளையும் கோப்பாயில் 2 முன்னாள் போராளிகளும் சுழிபுரத்தில் ஒருவரும் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலைத் தெரிவித்தார்.

தமிழீழ தேசிய மாவீரர் தினம் இம்முறை தமிழர் தாயகம் எங்கும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு இம்முறை தமிழ் மக்கள் எவருக்குமே அஞ்சாத மனத் துணிவோடு அஞ்சலி  செலுத்தினர். தமிழ் மக்களின் இந்த வீரச் செயலைப் பார்த்து சிங்களம் சினம் கொண்டது. மாவீரர்களுக்கு முன்னாள் புலிகள் தான் அஞ்சலி செலுத்தினார்கள் என்றும் தாயகமெங்கும் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டென்றும் சிங்களம் சித்தரிக்கவுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த முன்னாள் போராளிகளை அடித்து உதைத்து மாவீரர் தினம் கொண்டாடினார்கள் என்ற பொய் வாக்குமூலத்தைப் பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இவர்களை மீண்டும் சிறையில் அடைப்பதே சிங்களப் புலனாய்வுத்துறையின் நோக்கமாக இருக்கிறது. அதன் மூலம் அடுத்து வரும் ஆண்டில் மாவீரர் தினத்தையே தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்காகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் சிங்கள அரசு கைது செய்து வைத்திருக்கிறது. இவர்களை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அரசியலமைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் தனது இலக்கை அடையலாம் என்று சிங்களம் பகல் கனவு காண்கிறது. ஆனால், அடக்கப்படுகின்ற எந்தவொரு இனமும் ஆவேசத்தால் எழுச்சியடையும் என்ற உண்மைத் தத்துவத்தை சிறீலங்கா அரசாங்கம் உணராமல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கியாள நினைக்கிறது. கடந்த 30 வருடங்களில் கண்ட அனுபவப் பாடங்களை வைத்துக்கூட சிங்களம் இன்னும் தமிழ் மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவில்லை. அடிக்க அடிக்க அடிவாங்கிய தமிழன் என்று திருப்பி அடிக்கத் தொடங்கினானோ அன்று தொடக்கம் இன்றுவரை தமிழன் அடங்காத் தமிழனாகவே இருந்து வருகின்றான் என்ற வரலாற்றுப் பாடத்தைச் புரட்டிப் பார்ப்பது சிங்கள தேசத்திற்கு நல்லது.

இல்லாவிட்டால் காலத்திற்கு காலம் சிங்களவர்கள் தமிழர்களை அடித்து உதைப்பதும் அதற்கு எதிராக தமிழர்கள் சிங்களவர்களை நொருக்குவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இந்த நிலையை நாம் விரைவில் மாற்றியாக வேண்டும். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை என்றுமே புரிந்துகொள்ள மாட்டார்கள். அதனால் சர்வதேசத்தினூடாகத்தான் அவர்களுக்கு நாம் யார் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமானது. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல, போராட்டங்கள், மாநாடுகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள், மாவீரர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றை புலம்பெயர்ந்த நாடுகளில் நடத்துவதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும்.

இதற்காக புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் ஓரணியில் திரண்டெழ வேண்டும். இந்தப் போராட்டங்களில் இயன்றவரை அந்தந்த நாடுகளின் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களையும் இணைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது எமது போராட்டங்களின் நியாயத் தன்மையை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவும். இதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களே தயாராகுங்கள். தமிழர் தாயகத்தில் நடைபெறும் கடத்தல்கள், காணாமற்போதல்கள், பாலியல் வல்லுறவுகள், நிலங்கள், வளங்கள் சூறையாடல்கள் போன்ற அனைத்தையும் தடுக்கத் தயாராகுங்கள். இது தாயக உறவுகளின் வேண்டுகை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *