முல்லைத்தீவு மவாட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னச்சாளம்பன்கிராமத்தில், இப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 64ம் படைப்பிரிவைச்சேர்ந்த இராணுவத்தினரால் குடும்ப உறுப்பினர்களது பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அவர்களை ஒளிப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை 14.12.2012 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் ஒட்டுசுட்டான்-முல்லைத்தீவு சந்தியை அண்மித்தாகவுள்ள இராணுவத்தின் 64வது படைப்பிரிவின் தலைமையகத்திலிருந்து, 1கி.மீ தொலைவில், மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள சின்னச்சாளம்பன் கிராமத்தில் 184 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
2010ம் ஆண்டின் முற்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது, இராணுவத்தினரின் பதிவிற்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு, குடும்பம் குடும்பமாகவும், தனித்தனியாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் ஒளிப்படமும் எடுக்கப்பட்டிருந்தனர்.
14.12.2012 அன்று சின்னச்சாளம்பன் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4.50 வரையும் வருகைதந்த 64ம் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று இராணுவத்தினர், தம்மோடு கொண்டுவந்திருந்த பதிவேட்டில் இருந்த குடும்ப விபரங்களை சரிபார்த்துக் கொண்டதோடு, குடும்ப உறுப்பினர்களை தனித்தனியாகவும், குடும்பமாகவும் ஒளிப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.
அன்றைய நாளில் பல்வேறு காரணங்களிற்காக வீட்டில் இல்லாது வெளியிடங்களிற்குச் சென்றிருந்த குடும்ப உறுப்பினர்களை ஒளிப்படம் எடுப்பதற்காக தாம் மீண்டும் வீடுகளுக்கு வருவோம் என்று கூறிச்சென்றுள்ள இராணுவத்தினர் மீண்டும் தாங்கள் வரப்போகும் நாள் குறித்த எவ்வித தகவலினையும் குடும்பத்தவர்களிடம் வழங்கவில்லை.
முன்னறிவித்தல், பொதுச்சேவை பணியாளர்கள் மற்றும் கிராமசேவையாளர் துணை எதுவுமின்றி வீடுகளுக்கு வருகைதந்த இராணுவத்தினரின் இச்செயற்பாடு காரணமாக
கிராம மக்கள் அன்று பெரிதும் அச்சமடைந்தும் உள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலேயும், வடக்கில் பொதுமக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கைகள் என்பன தொடர்ந்தவண்ணமுள்ளமை அரசாங்கமானது தமிழ் மக்களை இன்னும் பாரபட்சமாக நடாத்துகின்றது என்பதற்கும், வடக்கில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறைக்கப்படவில்லை என்பதற்கும் சாட்சிகளாக உள்ளன.