Search

யாழ் பல்கலைக்கழகத்தை மீளஇயக்க கடும் அழுத்தங்கள் பிரயோகிப்பு –

யாழ்.பல்கலைக்கழகத்தை மீள இயக்குவது தொடர்பில் வெவ்வேறு தரப்புகளும் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தினை மீள திறப்பது தொடர்பான அறிவிப்பினை விடுக்குமாறு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு கடந்த ஒரிரு நாட்களாக நிர்ப்பந்தங்கள்  பிரயோகிப்பதாக பீடாதிபதியொருவர் தெரிவித்தார்.

எனினும் மாணவர் அமைப்புக்களும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பெரும்பான்மையானவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே விரிவுரைகளில் பங்கெடுக்க முடியுமென்ற நிலைப்பாட்iடை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே மருத்துவ பீட விரிவுரைகளை ஆரம்பிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாணவர்களது கடுமையான எதிர்ப்புகளால் பிசுபிசுத்துப்போயுள்ளது. அதை தொடர்ந்து அவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையினையடுத்து அதை தீர்த்து வைக்க மறுபுறம் இரகசியப்பேச்சுக்கள் ஆரம்பமாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்கள் பலனளித்திருக்கவில்லை.

மாணவர்களை விடுவிக்க மறுத்த அவர் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்கவும் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பிடமிருந்தும் அரச ஆதரவு குழுக்களிடமிருந்தும் பலத்த நெருக்கடிகளை பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.

மாணவர்களது விடுதலைபற்றி மூச்சுவிட மறுக்கும் அத்தரப்புக்கள் பல்கலைக்கழகத்தை திறக்க வைத்து நல்ல பிள்ளை பெயரெடுக்க முற்படுவதாக சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இதனிடையே தெற்கிலிருந்து வருகை  தந்து கல்வி கற்கும் பெரும்பான்மை மாணவர்களது நலன்களை முன்னிறுத்தியே சில தரப்புக்கள் மாணவர்கள் கைது பற்றி பேசாது பல்கலைக்கழகத்தை மீள திறப்பது பற்றியும் கல்வி பாழாகுவது பற்றியும் பிரச்சாரம் செய்வதாக மாணவர்கள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. மறுபுறத்தே பல்கலைக்கழகத்தை மீள திறப்பது பற்றி ஆராய மீண்டும் பலாலியில் உயர்மட்ட மாநாடொன்று இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.




Leave a Reply

Your email address will not be published.