இந்தியா உதவாது போனால் போரில் நெருக்கடியை சந்தித்திருப்போம் – மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழுமையான கடப்பாடு இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்துக்கும் இருப்பதாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காப் படைகளின் பரந்துபட்ட மூலோபாய அறிவு, அனுபவம், ஒழுக்கம் மற்றும் திறமை ஆகியவற்றை பாராட்டிய இந்திய இராணுவத் தளபதி, இவை இருநாட்டுப் படைகளுக்கும் கற்றுக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் இந்த நடவடிக்கையில் தாம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ராஜீவ் திவாரி, கொழும்ப்புகான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் சுமித் கபூர், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.