தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு 2006ம் ஆண்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழ்க் கனேடியர்கள் இருவரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
32 வயதான சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் 36 வயதான பிரதீபன் நடராஜா ஆகிய இருவரும் தங்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கனடாவில் தாக்கல் செய்திருந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையாததால் கடந்த 21ம் திகதி அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இருவரும் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதே தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று நீதிபதி Lios Bloom முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.எனவே இவர்களின் பிணை தொடர்பான கோரிக்கை மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்காக ஒரு கோடி டொலர் பெறுமதியுள்ள ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதீபன் நடராஜாவின் சட்டத்தரணி Sam A . Schmidt தனது மனுதாரர் குடும்பப் பொறுப்புள்ள ஒரு கடும் உழைப்பாளி என்று தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவின் சட்டத்தரணி Joshua L. Dratel தெரிவிக்கும் போது கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்குக்கூடாக சென்று கொண்டிருக்கும் தனது மனுதாரர் சுரேசுக்குஇது இன்னொரு அத்தியாயம் . இதனை நாங்கள் கடந்து போக வேண்டும் என்று கூறினார்.
அத்தோடு கனடாவிலிருந்து நியூயோர்க்கிற்கு வந்திருக்கும் சுரேஷின் தாயாரை தனது மகனோடு பேச அனுமதிக்கும்படி நீதிபதியை வேண்டிக்கொண்டபோது,
குறுகிய தூரத்திலிருந்து இருவரையும் பேசிக்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார்.
2006ல் கைது செய்யப்பட்ட போது வாட்டலூ பல்கலைக் கழகத்தில் தனது பொறியியல் பட்டப் படிப்பை முடித்திருந்த சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா, கனடாவில் பிணையில் இருந்த காலத்தில் கலைத்துறை பட்டப்படிப்பையும், வணிகத்துறையில் முதுமாமணிப் பட்டத்தையும் பெற்றதோடு சிறப்பு மாணவனுக்கான சான்றிதழ்களும் பரிசும் பெற்றிருந்தார். அண்மையில் திருமணம் செய்த இவர் அதன்பின் ஒட்டாவா பல்கலைக் கழகத்தில் முதலாம் வருட சட்டக்கல்லூரி மாணவனாக கல்வி பயின்று கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.