தஞ்சாவூரில் கடந்த 31 ஆம் திகதி பாலமுருகன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பாலமுருகன் நினைவு நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார் வல்வையைச் சேர்ந்த தனுஜா.
பாலமுருகன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான 20 ஆவது ஆண்டு பாலமுருகன் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற தனுஜா 10 வயதிற்குட்பட்ட 50 மீட்டர் Bake Stoke மற்றும் Free Style பிரிவுகளில் போட்டியிட்டார்.
50 மீட்டர் Bake Stoke பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 44 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கிய தனுஜா, 50 மீட்டர் Free Style பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 35.55 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
தமிழீழம் வல்வையைச் சேர்ந்த தனுஜா ஜெயகுமார் கடந்த மாதம் 10 ஆம் திகதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் Butter Fly நீச்சல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, ஒரு வினாடியில் தங்கப்பதக்க வாய்ப்பினை இழந்த தனுஜா 39 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியிருந்தார்.
இதன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட தென்மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டியில் 50 மீட்டர் Butter Fly நீச்சல் போட்டியில் பங்கேற்ற தனுஜா 39 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து 5 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.