கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு அந்தந்த கல்வி வலயங்களுக்கூடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 1ம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளிற்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிற்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றுள்ளனர்.
மேலும் இந்தப்பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெஸ்ரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினைகோரியிருந்தனர்.
தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர்.
இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம்.
அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்றார்.
இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாள ருடன் தொடர்பு கொண்டபோது,
விடயம் அனைத்தையும் கேட்ட பின்னர் தொலைபேசி அழைப்பில் சிக்கலிருப்பதால் பேசுவது முழுமையாக புரியவில்லை எனவும்,தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.
எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியினையும்,ஜனாதிபதி செயலணியின் கடிதத்தையும் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் சிங்கள மொழி கற்பிக்கப்படவுள்ளது.
எனினும் இவ்விடயம் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலை யினை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
இருந்த போதும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.