2009 ம் ஆண்டு வன்னி இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இலங்கைப் படையினர் கொலை செய்ததாக கூறப்படும், நந்திக்கடல் பகுதியில் விடுமுறைக்கால சுற்றுலா “போர் சுற்றுலாத்துறை” ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறையினரும் போரில் உயிரிழந்தவர்களை கொண்டு இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதை எதிர்த்துள்ளனர். இந்த ஹோட்டலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் திறந்து வைத்தனர்.
இந்தநிலையில் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்தில் உங்கள் விடுமுறையை கழிக்க வாருங்கள்” என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் விளம்பரமும் வெளியாகியுள்ளது.
இவ்வாறு போரினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட இடத்தில் சந்தோசத்தை கொண்டாடும் அளவுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறியுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
ஐக்கிய நாடுகளால் கொலைகள் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது, மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று பிரபல சுற்றுலா இயக்குநரான ஜினோ வேனன் பவல் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் போரில் கொல்லப்பட்டவர்களை கொண்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுமானால் இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்காணும் என்று சுற்றுலாத்துறை நிபுணர்களில் ஒருவரான சேம் கிளாக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தாம் அரச நிறுவனங்கள் அல்லாத தனியார் சுற்றுலா ஹோட்டல்களையே சுற்றுலாப் பயணிகள் மத்தியில் விளம்பரப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்