புலித்தடம் தேடி…! மகா.தமிழ்ப் பிரபாகரன் – 04

புலித்தடம் தேடி…! மகா.தமிழ்ப் பிரபாகரன் – 04

ல்வெட்டித்துறை… வீரம் விளைந்த நிலம். பிரபாகரன் பிறந்த மண்!

மதிய வெயிலில் வெறிச்சோடிக் கிடந்த வீதியின் வழியாக பிரபாகரன் வீட்டை அடைந்​தேன். ஒரு சுவர் மட்டும்தான் இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டு, அதுவும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது. அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டு வாசித்தேன். ‘தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இல்லம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதைத்தான் அழிக்க முயற்சித்து இருந்தனர். நான் கவனித்ததைப் பார்த்த முதியவர் ஒருவர், ‘ஒன்றரை வருஷத்துக்கு முன் ஆர்மிதான் இந்த வீட்டை உடைச்சது’ என்று ஒற்றை வரி வரலாற்றைச் சொல்லிச் சென்றார்.

இன்று பாழடைந்து, உருக்​குலைந்து கிடக்கும் அந்த வீட்டில்தான் பிரபாகரன் பிறந்தார். 1972-ம் ஆண்டு மக்கள் இல்லாத அரசுப் பேருந்தை எரித்ததற்காக பிரபாகரனையும் சில தமிழ் இளைஞர்களையும் போலீஸ் தேடியது. அவரது இருப்பை அறிந்த போலீஸ், அதிகாலைப் பொழுதில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தது. போலீஸ் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்ற பிரபாகரனுக்கு அப்போது வயது 16. அன்றோடு முடிந்தது, அவரின் வல்வெட்டித்துறை வீட்டு வாழ்க்கை.

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை, மாவட்ட நில வள அதிகாரியாக இருந்தவர். அவரின் பணி… இடமாற்றல்களாலும், சிங்கள ராணுவத்தின் சித்ர வதைகளாலும் கழிந்தது. தனது மகனின் மறை​விடத்தை அறிந்துகொண்டு பார்க்கச் சென்ற வேலுப்​பிள்ளையிடம் ‘இனி நான் உங்களுக்குப் பயன்பட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அந்த வீடும் ராணுவக் கண்காணிப்புக்கு இலக்காய் போனது. இதை, இன்று சிதைத்திருப்பதன் மூலமாக, கரிக்கட்டையால் அவரது பெயரை அழித்திருப்பதன் மூலமாக தனது ஆத்திரத்தைத் தீர்க்க முயற்சிக்கிறது சிங்கள இனவாதம்!

அங்கிருந்து, நெல்லியடி மகா வித்தியாலயம். இங்கு நிலைகொண்டு இருந்த சிங்கள ராணுவ முகாம் மீதுதான் 1987-ம் ஆண்டு, மில்லர் தாக்கு​தல் நடத்தினார். புலிகளின் ‘முதல் கரும்புலித் தாக்குதல்’ என்று அது வரலாற்றில் பதிவானது. இன்றும் இந்தப் பள்ளியைச் சுற்றி ராணுவம் கண்காணித்து வருகிறது.

‘தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்’ என்றதும், அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் ஆர்வமாக வந்து பேசினார். ”போர்க் காலத்துல நாங்க சந்திச்ச வேதனை, போரைவிடக் கொடியது. அஞ்சு மணிக்கு மேல வெளியே வரக் கூடாதுன்னு இருந்த ராணுவக் கட்டுப் பாட்டாலதான், இப்பக்கூட சன நடமாட்டம் ஏழு மணிக்குள் அடங்கிப் போயிறது.

‘தலையாட்டி விசாரணை’யை யாழ்ப்பாணத்துல தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. ஒரு ஆளைத் தலை​யில் கறுப்புத் துணி போட்டு கண் மட்டும் தெரியும் அளவில் மூடி, மக்கள் முன்னாடி ஆர்மி நிறுத்திடும். அவன் மக்களில் ஒவ் வொரு ஆளாகப் பார்ப்பான். யாரையாவது பார்த்து அவன் தலையாட்டினால், அந்த ஆளு புலிக்குத் தொடர்புடையவர், அவரை புலி என்று ராணுவம் பிடிச்சிடும். அப்புறம் அவங்களைக் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துடுவாங்க. அந்தத் தலை யாட்டி, மக்களோடு மக்களாக உறவாடியவனாத்தான் இருப்பான். ராணுவத்தின் மிரட்டலுக்கோ, பணத்துக்காகவோ காட்டிக்​கொடுப்பவனாக மாறி இருப்பான். இதில் அப்பாவிகள்தான் நிறைய சிக்குவார்கள். அத்தகைய தலை யாட்டிகள் இன்னைக்கும் நிறை யப் பேர் இருக்காங்க. அவங்க யாருன்னு தெரியாம, யாரைப் பார்த்தாலும் நாங்க பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கோம்” என் றார் வேதனையாக. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலை.

முன்பெல்லாம் காலை 9 மணிக்குத்தான் தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியும். மாலை 5 மணிக்குள் ஊருக்குள் வந்துவிட வேண்டும். வெளியிடத்தில் வேலை பார்ப்பவர்கள் மாலை 5 மணிக்குள் வீட்டுக்கு வருவது சாத்தியம் இல்லை என்றாலும் வேறுவழி இல்லை. வந்துதான் ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள்தான் கடந்த 10 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பகுதியில் இருந் திருக்கிறது. இறுதிப்போர் முடிந்த பிறகு இந்த நிபந்தனையைத் தளர்த்தி இருக்கிறது ராணுவம். ஆனாலும், தமிழர்கள் இரவுக்கு முன்னால் வீட்டை அடைந்து விடுகிறார்கள். விசாரணையே இல்லா விட்டாலும் இரவு அவர்களைப் பயமுறுத்தும் விஷயமாக மாறிவிட்டது.

புராதன கதறுகொட விகாருக்குச் சென்றேன். வட்ட வடிவில் பழங்காலத்து விகார்கள் இருந்தன. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை இருந்தது. ‘இது இந்திய அரசு அன்பளிப்பாகக் கொடுத்த சிலை’ என்றார் விகார் காவலாளி. அந்தப் புத்த ரிடமும் ஆயுதம் தரித்த ராணுவம் நின்றது.

அங்கிருந்து வலிகாமம்…

இந்தப் பகுதி விவசாயத்துக்கு ஏற்ற செம்மண் கொண்ட பகுதி. கடல் தொழில்களுக்கும் உகந்தது. வலிகாம மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் 1990-ம் ஆண்டிலேயே ராணுவம் பிடுங்கிக் கொண்டது. அப்போது, ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் தங்களது வாழிடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். ராணுவம் எல்லா இடங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டது. அந்தப் பகுதியில், பார்க்கும் பக்கம் எல்லாம் இடிந்த வீடுகளும் குண்டுகள் துளைத்த சுவர்களும்தான் இருந்தன. மின்சாரம் இல்லை. கல்வி இல்லை. மருத்துவமனை இல்லை. ஊரைச் சுற்றிலும் ராணுவ வளையங்கள் மட்டுமே இருந்தன. ஆங்காங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இத்தனை வலிகளையும் சுமந்துகொண்டுதான் வாழ்கிறார்கள். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.

மீள்குடியேற்றம் பற்றி விவரித்த தமிழ் அரசியல் பிரமுகர், ”ராணுவம் விடுதலை செய்யும் நிலப்பரப்பு என்பது 10-ல் ஒரு பங்குதான். கீரிமலை, மயிலட்டி, வசவிலான், குப்பிழான் போன்ற கிராமங்களில் சில பகுதிகளை விடுவித்து உள்ளனர். ஆனால், இன்றும் வலிகாமத்தின் 26 கிராமங்கள் உயர் பாது காப்பு வளையங்களில்தான் உள்ளன. இந்த கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் ராணுவம் புதைத்து வைத்த கண்ணி வெடிகள் பெரும் அளவில் இருக்கின்றன. மக்களின் நிலங்களில் ராணுவம் விவசாயம் செய்கிறது. விவசாயத்தில் கிடைப்​பதை சந்தையில் கொண்டுவந்து மக்களுக்கே விற்​கிறது. வலிகாமத்தின் கடலோரப் பகுதிகளை சுற்று​லாவுக்காக அரசு மேம்படுத்துகிறது. ஆனால், சுற்றுலா மீது செலுத்தும் கவனத்தை மக்கள் மீது செலுத்தவில்லை” என்றார்.

”பலாலி விமானத் தளத்துக்காகவும், காங்கேசன் துறைக் கடற்படைத் தளத்துக்காகவும் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவின் பலாலி விமானத் தளச் சீரமைப்புத் திட்டத்தை இலங்கை நிராகரித்து விட்டு தானே செய்கிறது. காங்கேசன் துறைத் துறைமுகம், இந்தியாவின் 20 மில்லியன் டாலர் உதவியோடு சீரமைக்கப்படுகிறது. அதே​போல் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலித் தொழிற்​பேட்டை சீரமைப்புக்கும் இந்தியா 174 மில்லியன் ரூபாயை இலங்கைக்குக் கொடுத்துள்ளது.

காங்கேசன் துறையின் கடலோரப் பகுதியில் ஒரு பெரும் பகுதியை மின்நிலையம் அமைப்பதற்காக கே.எல்.எஸ். என்ற மலேசிய நிறுவனத்துக்கு 22 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனம் 250 மில் லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

காங்கேசன் துறையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான சிமென்ட் ஆலைக்கு அருகே பல ஏக்கர்களை கோத்தபய ராஜபக்ஷேவின் நண்பர் ஒருவர் சுண்ணாம்புக் கற்கள் எடுப்பதற்காக ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவர் ஏற்கெனவே ராணுவப் பாதுகாப்போடு அங்குள்ள நிலங்களை சுண்ணாம்புக் கற்களுக்காக அழித்தவர்தான்” என் றும் அவர் சொன்னார்.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் எங்கெங்கோ நடக்கின்றன என்றாலும் பசியோடு கிடக்கிறார்கள் தமிழர்கள். வெளிநாட்டு நிதி எதுவும் தமிழர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்காக செலவிடப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. யாழ்ப்பணத்தின் மேற்கு கடலோரப் பகுதிதான் மாதகல். இங்கு சம்பில் துறை என்ற இடத்தில் கடற்படையால் அமைக்கப்பட்ட புத்த விகார் உள்ளது. 2009-ம் ஆண்டு போர் முடிந்த சில தினங்களில் ராஜபக்ஷேவின் மனைவியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சிங்கள அரசு வைத்துள்ள பெயர், ‘டம்புகொலபட்டுன’. அங்குள்ள ஆசீர்வாதச் சொற்களில் ‘சங்கமித்த மஹா றஹத் தேரணியின் இவ் உருவச்சிலை இலங்கைவாழ் மக்களுக்காக சிறீமத் ஜனாதிபதி பாரியார் கௌரவ சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷே அவர்களின் புரண அனுசரனையுடன் ஜூன் 5, 2009 அன்று சிறீ மஹா போதியின் தென்கிளை சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டு சங்கமித்த விகாரை பூமியில் பதிக்கப்பட்டு உள்ளது’ என்று வரலாறாக எழுதப்பட்டுள்ளது. 1992 முதல் இது முழுக்கமுழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஆகும். சம்பில் துறையில் இருந்து பொன்னாலை வரை சிங்களக் கடற்படைக்காக நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ராணுவத்துக்குக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவே முடியாத நிலை.

20 வருடங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதி​களுக்கான தேவை, கிராமச் சாலைகள்​தான். ஆனால், அரசு அதை அமைப்பதாக இல்லை. மாறாக, சுற்றுலா மேம்பாட்டுக்காக நகர்ப்புறச் சாலைகளைத்தான் விரிவு படுத்துகிறது, அதீதக் கவனமும் நெடுஞ்சாலைப் பணிகளில்தான் காட்டுகிறது. சிங்களக் கிராமங்களில் 100 பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றால், தமிழ்ப் பகுதிகளில் 10 பாதைகள் அமைக்கத்தான் ஒப்புதல் கொடுக்கிறது சாலை மேம்பாட்டகம். இப்படி நல்ல சாலைகளுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறது தமிழர் வாழிடம். ஊர் முழுக்க ராணுவம், அடிப்படை வசதிக்கு எதுவும் இல்லாத தமிழ் மக்கள் என்பதே அந்தப் பகுதியின் யதார்த்தம்.

‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. இதனால் ஐ.நா. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் எந்த ராணுவ முகாம் களையும், பாதுகாப்பு வளையங்களையும் அகற்ற முடியாது’ என்று டிசம்பர் 31-ம் தேதி இலங்கை கட் டளைத் தளபதி அறிவித்திருப்பதைப் படித்தால், புலிப் பூச்சாண்டியைக் காட்டியே மீதம் உள்ள தமிழர்களையும் சிறுகச்சிறுக மரணிக்க வைக்க, சிங்கள இனவாதம் முடிவெடுத்துவிட்டது!

ஊடறுத்துப் பாயும்…

Leave a Reply

Your email address will not be published.