ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் எனவும் இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க புலம்பெயர் புலிகள் ரகசியமான திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர் என ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவை கொண்டு இந்த யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்று, இது குறித்து ரகசியமான பேச்சுவார்;த்தைகளை நடத்தியுள்ளனர்.
ரஷ்யா, சீனா, கியூபா, ஆகிய நாடுகள இம்முறை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை என்பதால், இந்த ஈழம் தொடர்பான யோசனையை நிறைவேற்றி கொள்வதே புலம் பெயர் புலிகளின் இலக்காக உள்ளது.
இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் என்ற யோசனை மனித உரிமை பேரவையின் மாநாட்டில் முன்வைக்கப்படும் முன்னர், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இணையான தமிழீழ சுதந்திர தீர்மானம் என்ற பெயரில் தீர்மானம் ஒன்றை வெளியிடவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்தை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கில், தமிழ் மக்களை, இராணுவம் மற்றும் அரசாங்கம் துன்புறுத்தி வருவதாகவும் பெண்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதுடன் கொலை செய்து வருவதாக காட்டும் பொய்யான அறிக்கை ஒன்றை புலம் பெயர் புலிகள், மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.